பழம்பெரும் நடிகையான எம்.என். ராஜம் இரத்தக்கண்ணீர், நாடோடி மன்னன், பாசமலர் உள்ளிட்ட பல்வேறு புகழ் பெற்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சென்னை அடையாற்றில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் 90வது பிறந்தநாளையொட்டி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பது தனது வாழ்நாள் ஆசை” எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் நடிகை எம்.என். ராஜமின் விருப்பத்தை நிறைவேற்றிடும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.08.2025) அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனையடுத்து நடிகை என். என் ராஜம் செய்தியாளர்களுக்கு அளித்த பேசுகையில், “இதைவிட ஒரு சந்தோஷமான நேரம் என் வாழ்க்கையில் இதுவரைக்கும் இருந்ததே இல்லை. அவ்வளவு சந்தோஷமான நேரம். அவ்வளவு பெருமையான நேரம் இதுவாகும். 

நான் ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னேன், ‘நான் எப்படியாவது முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பார்க்க வேண்டும்’ என்று சொன்னேன். இந்த நாட்டு மக்கள் எல்லாம் அவரை பார்த்துக்கிட்டு இருக்கக்கூடிய இந்த நேரத்தில் என்னைப் பார்க்க  அவர் வீட்டுக்கு வந்து என்ன பார்த்தார் பாருங்கள் இதைவிட ஒரு பெருமை ஒரு மனுஷனுக்கு இருக்கவே முடியாது. அந்த பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது. அது கடவுளுடைய அனுக்கிரகம் அதற்கு நான் பெருமைப்படுகிறேன்” எனத் தெரிவித்தார்.