“அஜித்தின் வசீகரம், கவர்ச்சி...” - விடாமுயற்சி அனுபவம் பகிர்ந்த ரெஜினா

regina cassendra about ajithkumar and vidaamuyarchi

அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட மூன்று போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து சில நாட்கள் இடைவெளியில் வெளியானது. இதையடுத்து அஜர்பைஜானில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து படத்தில் நடித்த அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா உள்ளிட்ட நடிகர்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. இதையடுத்து படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் விரைவில் ரிலீஸ் தேதி அல்லது டீசர் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் படத்தில் நடித்த ரெஜினா கெஸாண்ட்ரா, படம் குறித்தும் அஜித் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், “விடாமுயற்சி படம் நன்றாக உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு முன்புஅஜித்தை எனக்கு தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் படப்பிடிப்பு முடிந்த பிறகு அந்த மனிதரை அனைவரும் சந்திக்க வேண்டும் என்று சொல்வேன். அவரிடம் இருக்கும் வசீகரமும் கவர்ச்சியும் இதுவரை நான் யாரிடமும் பார்த்ததில்லை.

மகிழ் திருமேனி சிறப்பாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். 90 சதவிகித படப்பிடிப்பை அஜர்பைஜானில் படமாக்கினோம். படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் என்னுடைய கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும். இவ்வளவு பெரிய படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை படக்குழு எனக்கு கொடுத்து நம்பிக்கையை வழங்கியிருக்கிறார்கள். அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார்.

ACTOR AJITHKUMAR Magizh Thirumeni Regina Cassendra vidamuyarchi
இதையும் படியுங்கள்
Subscribe