Regina Cassandra focuses on social work

ரெஜினா கசாண்ட்ரா தற்போது அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்திலும் நவாசுதீன் சித்திக் நடிப்பில் உருவாகி வரும் செக்ஷன் 108 படத்திலும் நடித்துள்ளார். திரைத்துறை மட்டுமின்றி சமூக பணிகளிலும் அவர் தொடர்ந்து ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா ஈடுபட்டார். சில தினங்களுக்கு முன்பு தூய்மை பணியில் ஈடுபட்டதோடு அடுத்ததாக பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளார். இதற்காக அவர் SUP மெரினா கிளப்பைச்சேர்ந்த குழுவினரோடு கை கோர்த்திருந்தார்.

தனது சமூகப் பணி தொடர்பான அனுபவம் குறித்து பேசிய ரெஜினா, “எனக்கு மிகவும் பிடித்த விஷயம் துடுப்பு ஏறுதல். அதை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதற்காக SUP மெரினா கிளப்பைச்சேர்ந்த குழுவினரோடு இணைந்து கொண்டேன். அவர்களின் இந்தச் சமூக முன்னெடுப்பு எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்தப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முக்கிய காரணமாக இருந்தது 12 வயதான சிறுவன் அனிஷ் தான். இந்தக் குழுவை வழிநடத்தும் அனிஷ் என்னை இதில் கலந்து கொள்ள ஊக்கமளித்தார்.

கடற்கரை மற்றும் நீர்நிலைகளை குப்பை கிடங்காக மாற்றிவிட கூடாது என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. சுற்றுச்சூழலில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். நீர் நிலைகள் நமக்கு அத்தியாவசியமானவை, அதைக் கலங்கடிக்க வேண்டாம். இந்தப் பணி மிகவும் தேவையான ஒன்று என நினைத்தேன். இந்தக் குழுவினரோடு இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது.”