Red Giant gifted a car to Mari Selvaraj for Maamannan success

Advertisment

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அரசியல் அதிகாரத்தில் சம பங்களிப்பு பற்றிப் பேசியிருக்கும் இப்படம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் மாமன்னன் படத்தின் வெற்றியை ஏ.ஆர். ரஹ்மான், உதயநிதி, மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்கள்.

இந்த நிலையில் படத்தின் வெற்றியைத்தொடர்ந்து உதயநிதி இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் காரை பரிசளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தைத்தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள உதயநிதி, “ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புப்படுத்தி கருத்துக்களை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிகரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி. இதற்காக ரெட் ஜெயண்ட் நிறுவனம் மாரி செல்வராஜுக்கு சாருக்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.