/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/05_62.jpg)
அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிமுடிந்த சில தினங்களுக்கு பிறகு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 2ஆம் தேதி அஜித் அவரது மகன் ஆத்விக் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்ததிட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் அஜித் குமார்சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்னும் சில தினங்களில் வீடு திரும்பவுள்ளதாகவும்கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜனில் விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்த போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)