Skip to main content

''இந்த படத்தை ரிலீஸ் செய்ய எனக்கு வெறும் 7 தியேட்டர்கள் தான் கிடைத்தது'' - ரவீந்தர் சந்திரசேகரன் அதிரடி 

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான 'மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்தது மட்டுமல்லாமல் இயக்குநராகவும் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. நடிகை ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். மேலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்.

 

ravi

 

இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் 11ஆம் தேதியே வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென முன்னறிவிப்பு இல்லாமல் சில படங்கள் ரிலீசானதால் போதிய அளவு தியேட்டர்கள் கிடைக்காததால் இப்பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து தியேட்டர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று, தற்போது இந்த படம் தமிழகம் முழுவதும் நவம்பர் 8ஆம் தேதி (இன்று)125 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது. இதற்கு  பின்னணியில் உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்கத்தின் அரசு தரப்பு கமிட்டி உறுப்பினர்களுக்கும் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. அப்போது நிகழ்வில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் இப்படத்தின் ரிலீஸ் குறித்து பேசியபோது.... 

 

sca

 

"இந்த படத்தை கடந்த அக்டோபர் 11 ஆம் தேதியே ரிலீஸ் செய்வதாக அறிவித்தபோது எனக்கு வெறும் 7 தியேட்டர்கள் மட்டும் தான் கிடைத்தது. அந்த சமயத்தில் இந்த நல்ல படத்திற்காக மிகப்பெரிய அளவில் செலவு செய்து, விளம்பரம் செய்தும் போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லையே என்கிற மன அழுத்தம் எனக்கு ஏற்பட்டது. இதை அப்போது பத்திரிகையாளர் சந்திப்பிலும் வெளிப்படுத்தி இருந்தேன். ஆனால் அதன்பிறகு இதைக் கேள்விப்பட்ட இங்கு அமர்ந்திருக்கும் திரையுலக முக்கியஸ்தர்கள் எனக்கு ஆறுதல் கூறியதோடு கொஞ்ச நாள் காத்திரு இந்த படத்திற்கு சரியான நிறைய தியேட்டர் கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் என்று என்னை ஊக்கப்படுத்தவும் செய்தார்கள்.

 

 

அவர்கள் சொன்னபடி இதோ எனக்கு இப்போது 125 தியேட்டர்கள் 'மிக மிக அவசரம்' படத்திற்காக கிடைத்துள்ளது. உண்மையிலேயே தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் சொல்வதைப்போல அவர்கள் வழிகாட்டுதலின்படி நாம் நடந்தால், சரியான நேரத்தில் சிறிய படங்களை ரிலீஸ் செய்து தருவதற்கு அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்பதை இந்த நன்றி அறிவித்தல் கூட்டம் மூலமாக வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்வை நடத்துகிறோம். ஏனென்றால் ஒருவர் மீது பழி போடுவது சுலபம். ஆனால், அதையும் தாண்டி அவர்கள் உதவி செய்தார்கள் என்கிறபோது அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டியதும் நம் கடமை. என்னைப்போன்ற வளரும் நிலையில் உள்ள ஒரு திரைப்பட வெளியீட்டாளருக்கு இவர்கள் கொடுத்துள்ள ஆதரவு மகத்தானது. இந்த சமயத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் விஜயபாஸ்கர் இருவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்