ரவி மோகன் தயாரித்து நடித்து வரும் திரைப்படம் ‘ப்ரோ கோட்’(BRO CODE).‘டிக்கிலோனோ’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்குகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி பிரியா, மாளவிகா மனோஜ், அர்ஜூன் அசோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசைப் பணிகளை ஹர்ஷவர்தன் ரமேஷ் குமார் மேற்கொள்கிறார்.
இப்படத்தின் முன்னோட்டம் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. அதை பார்க்கையில் இப்படம் கணவர்கள் திருமணம் பந்தத்தில் இருந்து வெளியேற வாய்ப்பு கிடைத்தால் என்ன அகும் என்பதை ஃபேண்டஸி மற்றும் காமெடி கலந்து உருவாகுவதாக தெரிந்தது. இப்படத்தின் தலைப்பிற்கு டெல்லியை சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனம் ஒன்று எதிர்ப்பு தெரிவித்தது. ப்ரோ கோட் என்ற பெயரை தங்கள் நிறுவனம் பதிப்புரிமை செய்து வைத்திருப்பதால் அதை படத்தில் பயன்படுத்தக்கூடாது என படத் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து ப்ரோ கோட் என்ற பெயரை தனது படத்துக்கு பயன்படுத்த தடுக்கக்கூடாது என டெல்லியை சேர்ந்த அந்த நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என ரவி மோகன் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதில் ப்ரோ கோட் என்ற தலைப்பு எந்த விதத்திலும் மதுபான உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனத்தின் வணிகச் சின்ன உரிமைகளை மீறவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி லக்ஷ்மி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரவி மோகன் தரப்பு, டெல்லி நிறுவனம் விண்ணப்பித்த வணிக ரீதியிலான பதிப்புரிமை, பரிசீலனையில் தான் இருக்கிறது, சினிமா தயாரிப்பை பொறுத்தவரைக்கும் இந்த தலைப்பை தங்கள் நிறுவனம் பதிப்புரிமை பெற்றுள்ளதாக வாதிட்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ரவி மோகன் தயாரிக்கும் படத்திற்கு ப்ரோ கோட் பெயரைப் பயன்படுத்தத் தடுக்கக்கூடாது என அந்த டெல்லி நிறுவனத்துக்கு மூன்று மாதம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இப்படம் தொடர்பாக இன்னொரு வழக்கும் சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. பாபி டச் கோல்டு யுனிவர்சல் என்ற தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் படம் நடிப்பதற்காக முன் பணம் பெற்றுக் கொண்டு படத்தில் நடிக்காமல் முன்பணத்தை வைத்து ப்ரோ கோட் படத்தை தயாரிப்பதாக வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து ரவி மோகனும் வழக்கு தொடர்ந்தார். இரு வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.