ரவி மோகன் தற்போது ‘ஜீனி’, ‘கராத்தே பாபு’ ‘பராசக்தி’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பராசக்தி படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மூன்று படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கராத்தே பாபு மற்றும் பராசக்தி படப்பிடிப்பில் இருக்கிறது. ஜீனி படப்பிடிப்பு முடிந்ததாக சொல்லப்படும் நிலையில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படங்களை தவிர்த்து ‘தனி ஒருவன் 2’ படத்தை கைவசம் வைத்துள்ளார். இதன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். அதன்படியே அனைவரும் அழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்த அவர், புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதாகவும் கூறி தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்தார். மேலும் ‘ரவிமோகன் ஸ்டூடியோஸ்’ என்று பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்த அவர், தற்போது லோகோவை வெளியிட்டுள்ளார். அதில் சிங்கம் நின்று கொண்டிருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வியப்பூட்டும் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதனை அறிவிப்பதற்கு முன்பு பாடகி கெனிஷாவுடன் சிவகங்கையில் உள்ள குன்றக்குடி முருகன் கோயிலில் சாமிதரிசனம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ரவி மோகன் ஆர்த்தியை பிரிவதற்கு கெனிஷா தான் என காரணம் என ஆர்த்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது நினைவுகூரத்தக்கது.