சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய ரவி மோகனுக்கு உத்தரவு

283

ரவி மோகன் தற்போது 'ஜீனி', 'கராத்தே பாபு' 'பராசக்தி' ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதனிடையே 'ரவி மோகன் ஸ்டூடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் 'ப்ரோ கோட்' படத்தை தயாரித்தும் வருகிறார்.

இந்த சூழலில் ரவி மோகனுக்கு எதிராக பாபி டச் கோல்டு யுனிவர்சல் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அவர்கள் தொடர்ந்த மனுவில், "எங்கள் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ.15 கோடு ஊதியமாக பேசப்பட்டு முன்பணமாக ரூ.6 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பணத்தை திருப்பி தராமல் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் ப்ரோ கோட் என்ற படத்தை தயாரிக்கிறார். அதனால் முன்பணமாக பெற்ற பணத்தை திருப்பி தர ரவி மோகனுக்கு உத்தரவிட வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பிற்கு ரவி மோகன் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் விசாரணையை இன்று(23.07.2025) தள்ளி வைக்கப்பட்டது. 

இதனையடுத்து ரவி மோகன் தரப்பில் பாபி டச் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவர் கொடுத்த மனுவில், ஒப்பந்தப்படி கால்ஷீட் கொடுத்தும் படப்பிடிப்பு தொடங்காததால் தனக்கு ஏற்பட்ட நிதி இழப்பீடு தொடர்பாக ரூ.9 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனு தாரருக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கையும் இன்று(23.07.2025) ஒத்திவைக்கப்பட்டு, ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கோடு சேர்த்து விசாரிக்க பட்டியலிடப்பட்டது.  
 
அதன்படி இரு வழக்குகளும் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ரவி மோகன் தரப்பிற்கு, இந்த வழக்கின் மூலமாக எதிர்மறையான விளம்பரம் தான் உங்களுக்கு ஏற்படும் அதற்கு பதிலாக நீங்கள் பணத்தை திருப்பி தரலாமே என கேள்வி எழுப்பினார். பின்பு ரவி மோகன் தரப்பு, அடுத்த படத்தில் நடிக்கும் போது பணத்தை திருப்பி அளிப்பதாக கூறியதை தயாரிப்பு நிறுவனம் ஏற்கவில்லை என விளக்கமளித்தது.

பின்பு தயாரிப்பு நிறுவனம் தரப்பு , ரவி மோகன் தன்னுடைய மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையின் போது வாடகை வீட்டில் வசிப்பதாக சொன்னார், ஆனால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார், அது தாங்கள் கொடுத்த முன்பணத்தில் தான் தொடங்கப்பட்டதாக குற்றம் சாட்டியது. இதையடுத்து இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு மத்தியஸ்தரை நியமித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ரவி மோகன் தொடர்ந்த இழப்பீடு வழக்கை தள்ளுபடி செய்து, ரூ.5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என அவருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

MADRAS HIGH COURT Production Ravi Mohan
இதையும் படியுங்கள்
Subscribe