ரவி மோகன் தற்போது ‘ஜீனி’, ‘கராத்தே பாபு’ ‘பராசக்தி’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பராசக்தி படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மூன்று படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கராத்தே பாபு மற்றும் பராசக்தி படப்பிடிப்பில் இருக்கிறது. ஜீனி படப்பிடிப்பு முடிந்ததாக சொல்லப்படும் நிலையில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படங்களை தவிர்த்து ‘தனி ஒருவன் 2’ படத்தை கைவசம் வைத்துள்ளார். இதன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருந்தார். இதன் லோகோவை கூட சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த அவர் வியப்பூட்டும் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார். அதன்படி அவர் தயாரிக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். இவர் சந்தானத்தை வைத்து ‘டிக்கிலோனோ’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படங்களை இயக்கியவர். இப்படத்தில் ரவி மோகன் தயாரிப்பதோடு நடிக்கவும் செய்கிறார். இவரோடு எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறார். படத்திற்கு ‘ப்ரோ கோட்’(BRO CODE) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து ரவி மோகனுடனான ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
கார்த்திக் யோகியின் பதிவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ரவி மோகன், படத்தின் தலைப்பை குறிக்கும் வகையில், “ஃபைனலி வீ மீட் ப்ரோ... கோட்-டை அவிழ்ப்பதற்காக... படப்பிடிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.