ரவி மோகன் தற்போது 'ஜீனி', 'கராத்தே பாபு' 'பராசக்தி' ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதனிடையே 'ரவி மோகன் ஸ்டூடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் 'ப்ரோ கோட்' படத்தை தயாரித்தும் வருகிறார்.

இந்த நிலையில் ரவி மோகனுக்கு எதிராக பாபி டச் கோல்டு யுனிவர்சல் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர்கள் தொடர்ந்து மனுவில், "எங்கள் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ.15 கோடு ஊதியமாக பேசப்பட்டு முன்பணமாக ரூ.6 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பணத்தை திருப்பி தராமல் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் ப்ரோ கோட் என்ற படத்தை தயாரிக்கிறார். அதனால் முன்பணமாக பெற்ற பணத்தை திருப்பி தர ரவி மோகனுக்கு உத்தரவிட வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எங்கள் மனுதாரரிடம் பெற்ற முன் பணத்தில் ரவி மோகன், சொந்த படத் தயாரிப்பிற்கோ அல்லது சொந்த செலவுகளுக்கோ பயன்படுத்த வாய்புள்ளதால் ப்ரோ கோட் படத்தை தயாரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். அதே போல் வேறு நிறுவனங்களின் தயாரிப்பிலும் அவர் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் ரூ.6 கோடிக்கான உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

இதையடுத்து ரவி மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரூ.6 கோடி முன் பணம் பெற்றது உண்மைதான். ஆனால் கால்ஷீட் கொடுத்தும் படப் பணிகளை படக்குழுவினர் துவங்காததால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடாக ரூ.10 கோடி தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், பாபி டச் தயாரிப்பு நிறுவனத்தின் மனுவிற்கு ரவி மோகன் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் விசாரணையை ஜூலை 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Advertisment

இந்த நிலையில் ரவி மோகன் பாபி டச் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் கொடுத்த மனுவில், தயாரிப்பு நிறுவனத்திடன் இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் செய்த நிலையில், ஒப்பந்தப்படி படப்பிடிப்பு துவங்காததால் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தும் படப்பிடிப்பு தொடங்காததால் தன்னால் வேறு படத்தில் நடிக்க முடியவில்லை. 

பின்பு மார்ச் முதல் ஜூன் மாதம் வரை கால்ஷீட் ஒதுக்கிய போதும் படப்பிடிப்பு நடத்ததாததால், ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. அதனால் படத்தில் இருந்து தான் விலகியுள்ளே. இது குறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் தகவல் தெரிவித்திருந்தேன். ஆனால் அவர்கள் முன்பணமாக கொடுத்த ரூ.6 கோடியை திருப்பி தர நோட்டி அனுப்பியுள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் தயாரித்த சென்னை சிட்டு கேங்க்ஸ்டர் படத்தையும் வேறு எந்த ஒரு படத்தையும் தயாரிக்கவும் விற்கவும் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு ஏற்பட்ட நிதி இழப்பீடு தொடர்பாக ரூ.9 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கு தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே ரவி மோகனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் நாளான ஜூலை 23ஆம் தேதி இந்த வழக்கையும் பட்டியலிட உத்தரவிடப்பட்டுள்ளது.