நடிகர் ரவி மோகன், கடந்த ஜனவரியில் ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளதாக தெரிவித்திருந்தார். பின்பு கடந்த ஜூனில் நிறுவனத்திற்கான லோகோவை வெளியிட்டார். அடுத்து பட அறிவிப்பு வெளியானது. ‘ப்ரோ கோட்’(BRO CODE) எனும் தலைப்பில் ‘டிக்கிலோனோ’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ பட இயக்குநர் கார்த்திக் யோகி இயக்குகிறார். இதில் தயாரிப்பதோடு ரவி மோகன் நடிக்கவும் செய்கிறார். இவரோடு எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்கிறார். 

Advertisment

இதனைத் தொடர்ந்து படத்தின் பூஜை சமீபத்தில் தயாரிப்பு நிறுவன அறிமுக விழாவில் நடந்தது. அதில் படக்குழுவினர் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி பிரியா, மாளவிகா மனோஜ், அர்ஜூன் அசோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை ஹர்ஷவர்தன் ரமேஷ் குமார். படத்தின்  முன்னோட்டம் அந்த நிகழ்வில் திரையிடப்பட்டது. ஆனால் பொதுவெளியில் வெளியிடப்படாமல் இருந்தது. 

இந்த நிலையில் ‘ப்ரோ கோட்’ படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முன்னோட்டத்தை பார்க்கையில், ஒரு நிகழ்வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது கணவரென எஸ்.ஜே.சூர்யாவை இன்னொரு தம்பதியிடம் அறிமுகப்படுத்துகிறார். அதே போல் மாளவிகா மோகனும் அர்ஜூன் அசோகனை அறிமுகப்படுத்துகிறார். தொடர்ந்து ஸ்ரீ கௌரி பிரியா, ரவி மோகனை அறிமுகப்படுத்துகிறார். மூன்று பேரும் தங்களது கணவர்களை புகழ்ந்து பேசுகின்றனர். ஆனால் கணவர்கள் பேசாமலே இருக்கின்றனர். அந்த சமயத்தில் நிகழ்வின் டிஜே-வாக இயக்குநர் பேரரசு வருகிறார். அவர், கல்யாணமான ஆண்களுக்காக இந்த வரிகள் என, ‘கல்யாண மாலை’ பாடலில் வரும் ‘கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா...’ வரிகளை ஒலிக்கச்செய்கிறார். பின்பு அந்த பாடலில் சில நிமிடம் ரீமேக்ஸாக்கப்பட்டு ஒலிக்க கணவர்களான எஸ்.ஜே.சூர்யா, ரவி மோகன், அர்ஜூன் அசோகன் சந்திக்கின்றனர். அப்போதும் மூவரும் பேசிக்கொள்ளாமலே சைகை மூலம் மது மற்றும் சிகரெட் பிடிக்கின்றனர். 

அப்போது திடீரென அவர்களுக்கு ஒரு கார்ட் பறந்து வர, அதில் ‘கல்யாணம்றது ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு மாதிரி’ எழுதப்பட்டுள்ளது. அதையே பின்னணி குரலில் இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசுகிறார். மேலும் “வெளியே இருந்து பார்த்தா அவங்க சந்தோஷத்துல கத்துற மாதிரி தெரியும். அதே உள்ள போய் பார்த்தா தான், அவங்க சாவு பயத்துல கத்துறாங்கன்னு புரியும். இப்டி உள்ள இருந்தே தவிச்சிட்டு இருந்த ஒருத்தனுக்கு வெளிய போய்ட்டு வர ஒரு வாய்ப்பு கிடைச்சுதுன்னா,” என முடிக்கிறார், மூவரும் சிரித்துக்கொண்டே பார்க்கின்றனர். அதோடு முன்னோட்டம் முடிகிறது. இதன் மூலம் ஃபேண்டஸி கலந்த ஒரு படம் போல் தெரிகிறது. அதாவது திருமண பந்தத்தில் இருந்து வெளியேற ஒரு வாய்ப்பு கிடைத்தால் அடுத்து என்ன ஆகும் என்ற பார்வையில், காமெடியாகவும் அதே சமயம் கலர்புல்லாகவும் படம் உருவாகுவது போல் தெரிகிறது. விரைவில் அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

Advertisment