கேரள மன்னன் மகாபலியின் நினைவாக மலையாள மக்கள் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஒரு வாரத்துக்கு மேல் கொண்டாடப்படும் இந்த பண்டிகை கேரள அரசு சார்பில் நேற்று முதல் கொண்டாடப்படுகிறது. இது வரும் 9ஆம் தேதி வரை தொடரும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த கொண்டாட்ட நாட்களில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் இருக்குமென கூறியுள்ளது.
இந்த நிலையில் கேரள சுற்றுலாத் துறை சார்பாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக ரவி மோகன் மற்றும் மலையாள இயக்குநர், நடிகர் ஃபசில் ஜோசஃப் கலந்து கொண்டனர். இருவரும் சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவான ‘பராசக்தி’ படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில், ரவி மோகனை முதல்வர் பினராயி விஜயன் அன்போடு வரவேற்றார். விழா குறித்து ரவி மோகன் பேசுகையில், “கேரளத்தின் அன்பும் விருந்தோம்பலும் எனது இரண்டாவது வீடாக மாற்றியது” என்றார். நிகழ்வில் ரவி மோகன் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.