
ஜம்மு காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப்பகுதியில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலையடுத்து பஹல்காம் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழகர்களை பாதுகாக்கும் முகமாக புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பலரும் தங்கள் இரங்கல்களையும் பிரார்த்தனைகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் திரைப்பிரபலங்களும் தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனது எக்ஸ் பக்கத்தில் தாக்குதலுக்கு உள்ளான ஒரு தம்பதியின் புகைப்படத்தை பகிர்ந்து இதயம் நொறுங்கிய எமோஜியை பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரவி மோகன், “பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான துயரமான தாக்குதல் மனம் நொறுங்கிவிடச் செய்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது பிரார்த்தனைகள்” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Heartbroken by the tragic attack on tourists in #Pahalgam. My thoughts and prayers are with the victims and their loved ones.#PahalgamTerroristAttack— Ravi Mohan (@iam_RaviMohan) April 23, 2025