ரவி மோகன் கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இந்த சூழலில் ரவி மோகன் ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார். ஆனால் ஆர்த்தி இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவென்றும் என்னுடைய ஒப்புதல் இல்லாமல் எடுத்த முடிவென்றும் கூறியிருந்தார். பின்னர் ரவி மோகன், ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இரண்டு பேரும் ஆஜராகி விளக்கமளித்தனர். இருப்பினும் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. நிலுவையில் இருக்கிறது.
இதனிடையே ரவி மோகனின் விவகாரத்து முடிவிற்கு பெங்களூரூவை சேர்ந்த பாடகி கெனிஷா தான் காரணம் என ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் நக்கீரனுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்தார். அதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்திருந்தார். இந்த தகவலை மறுத்த ரவி மோகன், ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில், “என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீங்க. தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்டதாகவே இருக்க விடுங்க. கெனிஷா 600 மேடைகளில் பாடியவர். பல உயிரை காப்பாற்றிய ஒரு ஹீலர். நானும் கெனிஷாவும் எதிர்காலத்தில் ஒரு ஹீலிங் சென்டர் ஆரம்பிக்க இருக்கிறோம். அதன் மூலம் பல பேருக்கு உதவ வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதை கெடுக்காதீங்க. அதை யாராலும் கெடுக்கவும் முடியாது” என கூறியிருந்தார்.
பாடகி கெனிஷாவும் ரவி மோகனின் விவாகரத்து முடிவிற்கு நான் காரணமில்லை என விளக்கமளித்திருந்தார். இந்த சூழலில் ரவி மோகனும் கெனிஷாவும் சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்வில் ஜோடியாக கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இருவரும் ஏற்கனவே வந்த தகவல்களை மறுத்த நிலையில் தற்போது ஒன்றாக பொதுவெளியில் தோன்றியது கோலிவுட்டில் பேசு பொருளாக மாறியது. இது தொடர்பாக ஆர்த்தி சமீபத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “அப்பா என்பது உறவுமட்டுமல்ல அது ஒரு உயர்ந்த பொறுப்பு. இன்று எங்கள் வாழ்க்கையில் குறுக்கே வந்தவர்களால் என் குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. என்னை அவரது முன்னாள் மனைவி என்று ஊடகவியலாளர்கள் அடையாளப்படுத்த வேண்டாம்” எனக் குறிப்பிட்டு ரவி மோகன் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இந்த நிலையில் ரவி மோகன் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “எனது முன்னாள் மனைவி பொய்யான விஷயங்களை உருவாக்குகிறார். நான் அவரையும் எனது குழந்தைகளையும் பண ரீதியாக துன்புறுத்தியதாக அவர் கூறும் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. எல்லா பிரச்சனைகளுக்கு தீர்வு நீதிமன்றத்தில் கிடைக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அல்ல. எனது திருமணத்தின் தொடக்கத்திலிருந்தே என் முன்னாள் மனைவியின் குடுமபத்தினர் நன்றாக கேம் ஆடுகின்றனர்.
கெனிஷா, ஆரம்பத்தில் இருந்து தோழியாக என்னை சில பிரச்சனைகளில் இருந்து மீட்டெடுத்தார். பின்பு நான் உடைந்து நின்ற போது என் வாழ்க்கைக்குள் வந்தார். எனது பணம், வாகனம், ஆவணங்கள், ஏன் எனது அடிப்படை கண்ணியம் கூட பறிக்கப்பட்டு வெறுங்காலுடன் என் சொந்த வீட்டை விட்டு வெளியேறிய போது அவர் தான் என்னுடன் நின்றார். என் சூழ்நிலையை பார்த்து கொஞ்சம் கூட தயங்காமல் அவர் உதவி செய்தார். அவர் ஒரு அழகான தோழி. நான் சட்ட ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, நிதி ரீதியாக போராடிய அனைத்துப் போராட்டங்களையும் அவர் பார்த்தார். பின்பு என்னுடன் இருக்க அவர் தேர்ந்தெடுத்தார். அது புகழுக்காக அல்ல, கவனத்திற்காகவும் அல்ல முழுமையான வலிமைக்காக. நான் மகிழ்ச்சியாக இருக்கத் தகுதியானவன் என்பதை எனக்கு நினைவூட்டியதும் அவர் தான்.
அவர் எனக்கும், என் பெற்றோருக்கும், என்னைத் தொடர்ந்து வழிநடத்திய என் குழுவினருக்கும் நிறைய செய்துள்ளார். அது மிகவும் மரியாதைக்குரிய ஒன்று. அவருடைய குணத்துக்கும் தொழிலுக்கும் சிறு அளவில் கூட அவமரியாதை ஏற்பட நான் அனுமதிக்க மாட்டேன். அவர் ஒரு ஆன்மீக சிகிச்சையாளர். அற்புதமான பாடகியும் கூட. ஆரம்பத்தில் என் கதையைச் சுருக்கமாகக் கேட்ட நிமிடமே, அவர் எனக்கு ஒரு சிகிச்சையாளராக அல்லாமல் தோழியாக மட்டுமே உதவுவேன் என்று உறுதியளித்தார். அவர் தான் என் வாழ்வில் ஒளி கொண்டுவந்தவர். என்னை அறிந்தவர்களுக்கு என் நன்றி உணர்வு தெரியும். என்னை நீங்கள் மதிக்கிறீர்கள் என்றால், கெனிஷாவுக்கும் அதையே செய்வீர்கள் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.