ரஜினியின் தர்பார் படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் 23ஆவது படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர் முருகதாஸ். இப்படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தை அடுத்து பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து படமெடுக்கவுள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். இதன் மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமீர் கான், அக்ஷய் குமார் உள்ளிட்ட ஹீரோக்களை இயக்கிய ஏ.ஆர் முருகதாஸ் மற்றொரு முன்னணி நடிகரான சல்மான் கானை இயக்கவுள்ளார். சல்மான் கான், கடைசியாக டைகர் 3 படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. இதையடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக 1 வருடத்திற்கும் மேலாக தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால், அப்படம் குறித்த அப்டேட் இன்னும் வெளியாகாத சூழலில் சர்ப்ரைஸாக ஏ.ஆர் முருகதாஸ் பட அறிவிப்பு வெளியானது.
முதல் முறையாக இருவரும் கூட்டணி வைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிக்கந்தர் என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா தயாரிக்கிறார். அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. இதனைக் கடந்த மார்ச்சில் அறிவித்த படக்குழு, தற்போது கதாநாயகி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனா சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இதற்கு முன்பு பாலிவுட்டில் ரன்பிர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தியில், விக்கி கௌஷல் நடிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் தெலுங்கில் புஷ்பா 2, ரெயின்போ, தி கேர்ள்ஃபிரண்ட் மற்றும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் தனுஷின் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.