Skip to main content

ராஷ்மிகா விவகாரம் - 19 வயது இளைஞரிடம் விசாரணை

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

rashmika mandana deep ai fake video issue update

 

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஏஐ டீப் ஃபேக் வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், இதற்குப் பல்வேறு பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்பு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

 

போலி வீடியோ தொடர்பாகச் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மட்டுமல்லாது ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸ், இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பீகாரைச் சேர்ந்த 19 வயது இளைஞரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளைஞர் தான் முதலில் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்து பின்னர் மற்ற தளங்களில் பரவலாகப் பகிர்ந்துள்ளார் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனிமல் பட விமர்சனம் குறித்து ராஷ்மிகா பதில்  

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
rashmika about his animal scene troll

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா கடைசியாக பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் ரூ.900 கோடி வசூலித்தாக கூறப்படுகிறது. இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனுஷின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அனிமல் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் ராஷ்மிகா பேசும் தொனி கிண்டலுக்கும் கேலிக்கும் சமூக வலைதளங்களில் உள்ளானது. இந்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு தற்போது பதிலளித்துள்ளார் ராஷ்மிகா. இது தொடர்பாக பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள ராஷ்மிகா, “பெண்களை உருவ கேலி செய்யும் மனிதர்களை எனக்கு பிடிக்காது. அவர்கள் என் படத்தை பற்றியும், நான் வசனம் பேசும்பொழுது என் முகத்தை பற்றியும் கிண்டல் செய்கிறார்கள். என் நடிப்பு எப்படி இருந்தது என எனக்கு தெரியும். நான் அந்த காட்சியில் நடித்து ஐந்து மாதங்கள் ஆகிறது.

rashmika about his animal scene troll

 

அந்த சீன் ஒன்பது நிமிடம் கொண்ட பெரிய சீன். அதில் நடிக்கும் போது செட்டில் இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினார்கள். சிறப்பாக வந்துள்ளதாகவும் சொன்னார்கள். ஆனால் ட்ரெய்லர் வெளியான போது, அதே காட்சியில் நான் பேசிய ஒரு வசனம் கிண்டலுக்குள்ளானது. அதை பார்க்கும் போது ஒரே காட்சியை செட்டில் இருந்தவர்கள் ரசிக்கிறார்கள், ரசிகர்கள் ட்ரோல் செய்கிறார்கள். அப்போது நான் எதில் வாழ்கிறேன் என தோன்றியது. என்ன நடித்தேன் என்பது எனக்கு தெரியும். ஆனால் ரசிகர்களுக்கு அந்த 10 செகண்ட் மட்டும் தான் தெரிகிறது” என்றார்.

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை?; டெல்லியில் பரபரப்பு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
4 years old girl child inciedent in delhi

டெல்லியில் டியூஷன் சென்டர் ஒன்றில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறி பாண்டவ் நகர் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து டெல்லி கிழக்கு சரக கூடுதல் காவம் ஆணையர் சாகர் சிங் கல்சி கூறுகையில், “ 4 வயது சிறுமி ஒருவர் டியூஷன் படிக்கும் இடத்தில் 34 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று (23.03.2024) மண்டவாலி காவல்நிலையத்திற்கு புகார் ஒன்று வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்த பகுதியில் வதந்தி பரவியதால் மக்கள் திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அமைதியான சூழலை ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

மேலும் டெல்லி கிழக்கு போலீஸ் டிசிபி அபூர்வ குப்தா கூறுகையில், “சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. அவளது உடல்நிலை சீராக உள்ளது. இந்த வழக்கு குறித்த அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை முடிந்துவிட்டது. மருத்துவ ஆலோசகரிடம் நன்றாகப் பேசுகிறார். ஒரு சிலர் உள்நோக்கத்தோடும் பரப்பும் பொய்யான தகவல்களை நம்பி தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.