கன்னடத்தில் அறிமுகமானாலும் தமிழ், தெலுங்கு, இந்தி என தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. கடைசியாக தமிழ், தெலுங்கில் உருவாகி கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியான ‘குபேரா’ படத்தில் தனுஷ், நாகர்ஜூனாவுடன் நடித்திருந்தார். இப்படம் தமிழில் கலவையான விமர்சனங்களும் தெலுங்கில் நல்ல வரவேற்பையும் பெற்று ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. இப்போது தெலுங்கில் ‘தி கேர்ள் ஃபிரண்ட்’ மற்றும் ‘மைசா’ படங்களை கைவசம் வைத்துள்ளார். இரண்டு படங்களிலுமே அவர் லீட் ரோலில் நடிக்கிறார். இதில் ‘தி கேர்ள் ஃபிரண்ட்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ராஷ்மிகா கூறிய கருத்து அவருக்கு எதிராகவே மாறியுள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “எனக்கு முன் கொடவா சமூகத்தைச் சேர்ந்த யாரும் திரைப்படத் துறையில் நுழைந்ததில்லை. நான்தான் முதல் ஆள் என நம்புகிறேன்” என்றார். இது தற்போது சர்ச்சையாகி உள்ளது. திரைப்படத் துறையில் பல ஆண்டுகளாக இருக்கும் பிரேமா, குல்ஷன் தேவையா, நிதி சுப்பையா உள்ளிட்ட சிலர் கொடவா சமூகத்தை சார்ந்தவர்கள். இதனால் ராஷ்மிகாவின் கருத்து கொடவா சமூகத்தை சேர்ந்தவர்களை கோபப்படுத்தியுள்ளது. அவர்களில் சிலர் ராஷ்மிகாவுக்கு தனது சொந்த சமூகம் குறித்த போதிய புரிதல் இல்லை என்றும் அச்சமூகத்தை சேர்ந்த மூத்த நடிகர்களின் பங்களிப்பை புறக்கணிப்பதாக விமர்சிக்கிறார்கள்.
இந்த சர்ச்சை குறித்து கொடவா சமூகத்தை சார்ந்த பிரேமா, “எனக்கு முன்பு, நடிகை சசிகலா துணை வேடங்களில் நடித்தார். பின்னர் நான் திரைப்படத் துறையில் நுழைந்தேன், பின்னர் பல கொடவா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்” என்றார். பின்பு அதே கொடவா சமூகத்தை சார்ந்த நிதி சுப்பையா, “ராஷ்மிகா சொன்னது ஒரு நகைச்சுவையாகக் கூட இருக்கலாம், ஆனால் அவர் சொன்னதால் அது உண்மையாகிவிடாது. இதை ஒரு பெரிய பிரச்சினையாக மாற்றக்கூடாது. நாம் அதைப் புறக்கணிக்க வேண்டும். ராஷ்மிகா ஏன் அந்தக் கருத்தைச் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.