மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பைசன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி பல கட்டங்களாக நடந்து கடந்த பிப்ரவரி மாதம் நிறைவுற்றது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மார்ச் மாதம் வெளியானது. படம் அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை 5 ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்டின் நிர்வாக இயக்குநர் சமீர் நாயர் முழுப்படத்தை பார்த்து படக்குழுவை பாராட்டியிருந்தார்.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘தீக்கொளுத்தி’ பாடல் லிரிக் வீடியோவுடன் கடந்த 1ஆம் தேதி வெளியானது. காதலியை பிரிந்த பரிதவிப்பில் வேதனையுடன் நாயகன் பாடும் பாடலாக இப்பாடல் அமைந்திருந்தது. இதையடுத்து தற்போது இரண்டாவது பாடலாக ‘றெக்க றெக்க’ எனும் பாடல் லிரிக் வீடியோவுடன் வெளியாகியுள்ளது. இப்பாடலை ராப் பாடகர்கள் வேடன் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
தெருக்குரல் அறிவு மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் எழுதியுள்ளனர். இப்பாடல் துருவ் விக்ரம் போட்டிக்கு ரெடியாவது போலவும் அதற்காக கடுமையான பயிற்சியில் அவர் ஈடுபடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. அதற்கேற்றார் போல், ‘கண்ணுக்கு தெரிவது தடையில்லடா... பயந்த உடலுக்கு உயிரில்லடா... பாயுடா இனி பதுங்காத’ எனும் உத்வேகம் அளிக்கும் வரிகள் இடம்பெற்றுள்ளது.
மலையாளத்தில் ராப் பாடகராகப் புகழ் பெற்றவர் வேடன். சமீபகாலமாக ‘மீ டு’ சர்ச்சை, போதைப்பொருள் சர்ச்சை, அரசியல் கருத்து சர்ச்சை என தொடர்ந்து பரபரப்பாக பேசப்பட்டார். தமிழில் விஜய் மில்டன் இயக்கத்தில் கோலி சோடா படத்தை மையப்படுத்தி புதிதாக உருவாகும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஆனால் அதற்கு முன்பாக பைசன் படத்தில் ஒரு பாடலை மட்டும் பாடி எண்ட்ரி கொடுத்துள்ளார்.