rap singer vedan issue

கேரளாவில் பிரபல ராப் பாடகராக வலம் வருபவர் ஹிரன்தாஸ் முரளி என்கிற வேடன். இளம் பாடகரானஇவர் வேடன் என்கிற பெயரிலே தொடர்ந்து இயங்கி வருகிறார். முதலில் சுயாதீன ராப் பாடகராக தனது கரியரை தொடங்கிய இவர் 2020ஆம் ஆண்டு ‘வாய்ஸ் ஆஃப் வாய்ஸ்லெஸ்’ என்ற ஆல்பத்தை வெளியிட்டிருந்தார். இதை இவரே எழுதி பாடியிருக்கையில், தான் கடந்து வந்த பாதை, சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் பல்வேறு அரசியல் விஷயங்களை பேசியிருந்தார். இவரது தந்தை கேரளத்தை சேர்தவர் என்றும் தாய் இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

முதல் ஆல்பம் மூலம் இசை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற இவர் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘மஞ்சுமல்ல பாய்ஸ்’ படத்தில், ‘குத்தந்திரம்’ பாடல் மூலம் வெகுஜன ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இதன் மூலம் பிரபலமும் ஆன இவர் இப்போது தொடர்ந்து முன்னணி நடிகர் படங்களில் பணியாற்றி வருகிறார். அவரது பாடல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது நேரடி இசை நிகழ்ச்சிக்கு சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்க்கிறது. அந்தளவிற்கு புகழ் பெற்று விளங்குகிறார்.

rap singer vedan issue

Advertisment

இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இவர்பின்பு ஜாமீனில் வெளியில் வந்தார். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே அவர் மீது, புலி பல் கொண்ட டாலர் அணிந்திருப்பதாக நீதிமன்றத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் வேடன் தரப்பு வழக்கறிஞர், அந்த புலி பல் ஒரு ரசிகர் தனது கட்சிக்காரருக்குப் பரிசளித்ததாக விளக்கமளித்தார். பின்பு வேடனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் பெற்ற பின் வேடன்,தன் ரசிகர்களிடமும் நலம் விரும்பிகளிடத்திலும் மன்னிப்பு கேட்டார். “மது மற்றும் போதைப்பொருள் ஒரு நல்ல பழக்கம் கிடையாது. இனிமேல் நான் நல்ல மனிதனாக மாற முயற்சிப்பேன்” என்றார்.

rap singer vedan issue

இந்த சம்பவத்தின் எதிரொலியாக மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கட்சியின் நான்காவது ஆண்டின் கொண்டாட்ட விழாவில் இவர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அது ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் நிகழ்வில் அவர் கலந்து கொண்டு பேசினார். இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான கேசரியின் ஆசிரியர் மது என்பவர், வேடனை விமர்சித்து ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார். ராப் இசையை குறிக்கும் வகையில் பேசிய அவர், “இது வளரும் தலைமுறையை விஷமாக்கும் ஒரு கலை வடிவம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் கோயில்களில் நடத்தப்படக்கூடாது. அதை தடுப்பது அவசியம்” என்றிருந்தார். இதற்கு பதிலளித்த வேடன், கோயில் விழாக்களில் வாய்ப்பு வழங்கப்பட்டால் நிச்சயம் பாடுவேன் என்றார். மேலும் “கடந்த காலங்களில் என்னை பிரிவினைவாதி என சிலர் அடையாளப்படுத்தினர். ஏன் அப்படி சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. சமத்துவத்தைப் போதிக்கும் அம்பேத்கரின் அரசியலை நான் நம்புகிறேன். மற்றதை மக்கள் தீர்மானிக்கட்டும்” என்று பேசியிருந்தார்.

Advertisment

rap singer vedan issue

இதையடுத்து இந்து ஐக்கிய வேதத் தலைவர் சசிகலா, ராப் இசை என்பது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின சாதியனரின் தனித்துவமான கலை வடிவமா? என ஒரு நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் “பட்டியல் பழங்குடியினர் துறையின் நிதியைப் பயன்படுத்தி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும்போது, ​​அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லாத ராப் இசை சேர்க்கப்பட வேண்டுமா? , வேடன் போன்ற ராப்பர்களின் நிர்வாண நடனங்களால் இந்த சமூகம் அவமானப்படுத்தப்படுகிறது. போதைப்பொருள் பயன்படுத்தியவரை அரசாங்கம் அழைத்திருக்கும் அணுகுமுறையை மாற்ற வேண்டும்” என பேசியிருந்தார். இவரது விமர்சனத்திற்கு பதில் அளித்த வேடன், “நான் முன்வைக்கும் அரசியலுக்கு பயந்து இந்த எதிர்வினைகள் உருவாகின்றன. நான் ஏன் ராப் செய்கிறேன் என்ற அவர்களின் கேள்வி ஜனநாயக விரோதமானது. ராப்பிற்கும் தலித்துகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது அவர்களின் கூற்று. ஆனால் உண்மையில், ஜனநாயகத்திற்கும் தீவிர இந்துத்துவ அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒரு சுயாதீன கலைஞரான என்னை ஒரு அரசியல் கட்சியின் ஒரு பகுதியாக சித்தரிக்க முயற்சிப்பது வெறும் முட்டாள்தனம்” என்றிருந்தார்.

rap singer vedan issue

இப்படி இந்த விவகாரம் பெருசாக வேடன் மீது, பா.ஜ.க. தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. பாலக்காடு நகராட்சி கவுன்சிலர் வி.எஸ். மினிமோல் என்பவர், வேடன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு புகார் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் இவர் பாடிய பாடல் ஒன்றில் பிரதமர் மோடியைப் பற்றி அவதூறு கருத்துகளை சொல்லியுள்ளதாகவும் இந்து சமூகத்தை சாதி அடிப்படையில் பிளவுபடுத்தக்கூடியதாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. தொடர்ந்து வேடன் மீது புகார்கள் குவிய அவருக்கு வலது சாரி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் மார்க்ஸிஸ்ட் கட்சியினர் மற்றும் இடது சாரி ஆதரவாளர்கள் வேடனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் சமூக வலைதளங்களிலும் வேடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சாரார் அவருடைய புகார் மற்றும் கைது வீடியோக்களை பரப்ப அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மற்றொரு சாரார் அவரது முதல் ஆல்பம் வீடியோவான ‘வாய்ஸ் ஆஃப் வாய்ஸ்லெஸ்’ உள்ளிட்ட அவரது பல வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.