விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் கர்நாடகாவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ். இவர் கடந்த மார்ச் மாதம் விமானம் மூலம் துபாயில் இருந்து பெங்களூரூவுக்கு 14.8 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் கடத்தி வந்தார். இதையடுத்து அவர் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த கடத்தலில் ரன்யா ராவின் நண்பரும் தெலுங்கு நடிகருமான தருண் ராஜூ மற்றும் தொழிலதிபர் சாகில் ஜெயின் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்து அவர்களையும் அதிகாரிகள் கைது செய்தனர். மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு ரன்யா ராவ் தரப்பில் தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் கடந்த மேம் மாதம் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யத் தவறியதால் ரன்யா ராவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் ரூ. 2 லட்சம் பிணை பத்திரமும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
ஜாமீன் வழங்கப்பட்டாலும் ரன்யா ராவ் காவலில் தான் இருந்து வந்தார். காரணம் அவர் மீது அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதால் வெளியே வரமுடியவில்லை. இந்த நிலையில், அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ள ஆலோசனை வாரியம் ரன்யாவிற்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், தண்டனைக் காலம் முழுவதும் ஜாமீன் கோர முடியாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மற்ற இரண்டு குற்றவாளிகளான தருண் ராஜூ மற்றும் சாகில் ஜெயினுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.