'வேள்பாரி'க்காக ஷங்கருடன் இணையும் ரன்வீர் சிங் - குழப்பத்தில் ரசிகர்கள்

Ranveer Singh to join hands with Shankar for velpaari novel project

இயக்குநர் ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தையும் ராம்சரண் நடிக்கும் 'ஆர்சி 15' படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்புகள் மாறி மாறி ஓரே சமயத்தில் நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து, அடுத்ததாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவலை ஷங்கர் திரைப்படமாக எடுக்கவுள்ளார் எனச் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே, சூர்யா விருமன் பட இசை வெளியீட்டு விழாவில், எம்.பி. சு.வெங்கடேசனுடன் இணைந்து ஒரு புராஜெக்ட் தொடங்கி இருப்பதாகவும் இது குறித்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் எனப் பேசியிருந்தார். அதனால் சூர்யா ஹீரோவாகவும் அதனை ஷங்கர் இயக்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டது. பின்பு சில முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், ஷங்கருடன் இந்தி நடிகர் ரன்வீர் சிங் தற்போது இணைந்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தை மூன்று பாகங்களாக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ரன்வீர் சிங் எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.

முன்னதாக ஷங்கரும் ரன்வீர் சிங்கும் 'அந்நியன் 2' படத்திற்காக இணைந்தனர். ஆனால் அப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இப்போது மீண்டும் இவர்கள் கைகோர்த்துள்ளதாக வெளியாகியுள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் இந்த கூட்டணி தொடருமா?, படத்தில் ரன்வீர் சிங் எந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பார்? எனப் பல கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் விரைவில் ஷங்கர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

director Shankar ranveer singh
இதையும் படியுங்கள்
Subscribe