வரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரிப்பில் நடிகர் ரஞ்சித் நடிப்பில் இயக்குநர் வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இறுதி முயற்சி’. இப்படத்தில் மேகாலீ, விட்டல் ராவ், கதிரவன், ராஜா, சத்குரு, குணா, சதீஷ், மோனிகா, நீலேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். திவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுனில் லாசர் இசையமைத்திருக்கிறார். அக்டோபர் மாதம் பத்தாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ரஞ்சித் பேசுகையில், “சாலிகிராமம் -வடபழனி -கோடம்பாக்கம் - ஆகிய பகுதிகளில் உள்ள சாலையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பயணித்த போதும், தற்போது பயணிக்கும் போதும் மனம் கனத்து விடும். ஏனெனில் சினிமாவில் என்றைக்காவது சாதித்து விட வேண்டும் என்ற கனவில் தங்களது வாழ்வை தொலைத்து விட்டு அலைபவர்கள் அதிகம். நான் எப்போதும் வாய்ப்புகளை தேடி அலைந்ததில்லை. ஆனால் எனக்கும் ஒரு வாய்ப்பு அமைந்தது. ஆர் கே செல்வமணி இயக்கத்தில் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க தேர்வானேன். இதற்காக அவரை சந்தித்ததில் இருந்து நடிகராக தேர்வாகும் வரை எனக்குள் பெரும் பதற்றம் இருந்தது. அந்த காலகட்டத்தில் எல்லாம் கதைக்குப் பொருத்தமான முகங்களை தான் இயக்குநர்கள் தேர்வு செய்தார்கள். அந்த வகையில் ஆர். கே. செல்வமணியின் கதைக்கு நான் பொருத்தமாக இருந்ததால் ஹீரோவாக தேர்வானேன். இதற்கு ஒளிப்பதிவாளர் பன்னீர் செல்வத்தின் விருப்பமும், சம்மதமும் முதன்மையாக இருந்தது. அன்று முதல் இன்று வரை ஒளிப்பதிவாளர் பன்னீர்செல்வம் என்னுடைய இனிய நண்பர்.
நான் சினிமாவில் நல்ல நடிகராக வேண்டும் என்று தான் வருகை தந்தேன். சினிமாவில் நுழைந்து வெற்றி பெற்றால் வீடு வாங்கிடலாம்... கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கலாம்.. என்று நினைத்து சினிமாவுக்கு வரவில்லை. நல்ல சினிமாவிற்காக தான் என்னுடைய கவனம் செல்லும். இதற்காகத்தான் நான் நிறைய சினிமாக்களில் நடிப்பதில்லை. இருந்தாலும் தினமும் இரண்டு சினிமாவை பார்ப்பேன். கதைகளை கேட்பேன். சினிமாவை.. நிலாவை ரசிப்பது போல் இதயத்தில் வைத்து ரசித்துக் கொண்டிருப்பேன். அதனால் எனக்கு சினிமா மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. இந்தத் தருணத்தில் தான் இயக்குநர் வெங்கட் ஜனா என்னை சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னார். முதலில் இதற்கு தயக்கம் தெரிவித்தேன். அதன் பிறகு இந்தக் கதையில் நான் ஏன் நடிக்க வேண்டும்? என கேட்டேன்.
சினிமாவை நேசித்தால் தான் சினிமாவில் ஜெயிக்க முடியும். சினிமா என்பது ஏனைய தொழிலை போல் அல்ல. இந்தத் தொழிலை சுவாசித்தால் தான் இந்த தொழிலில் இருக்க முடியும். அதனை தொடர்ந்து இன்றைய சினிமா பிசினஸ் குறித்து அவரிடம் விவரித்தேன். அதற்குப் பிறகு அவர் இந்த கதையை திரைக்கதையாக எழுதி என்னிடம் வாசிக்குமாறு சொன்னார். அந்த கதையை படித்ததும் பிடித்துப் போனது. ஏனெனில் அந்த கதையின் வாழ்வியல் என்னை உலுக்கியது. இந்த படைப்பில் இன்னும் சற்று கூடுதலாக உழைத்திருக்க வேண்டுமோ...! என்ற எண்ணம் இப்போதும் ஏற்படுகிறது. ஏனெனில் கதையின் நாயகனான ரவிச்சந்திரன் கதாபாத்திரம் அவ்வளவு உணர்வுபூர்வமாக எழுதப்பட்டிருந்தது.
இந்தப் படத்தில் கமர்சியல் அம்சங்கள் எதுவும் இல்லை என்றாலும் கதைக்கு தேவையான உண்மைத் தன்மையை திரைக்கதையில் நம்பக தன்மையுடன் இயக்குநர் வழங்கி இருக்கிறார். இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது. எங்கும் போரடிக்கவில்லை. ஆனால் இந்த படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறுமா..? என்றால்.. என்னால் உறுதி கூற இயலாது. படத்தின் கன்டென்ட் நன்றாக இருந்தால்... ரசிகர்களுக்கு பிடித்திருந்தால்... இந்தப் படம் வெற்றி பெறும் என நம்புகிறேன். என்னுடைய 30 ஆண்டுகால திரையுலக பயணத்தில் ஒரு நல்ல படத்தில் நடித்திருக்கிறேன் என்ற திருப்தி இந்த படத்தில் நடித்ததின் மூலம் எனக்கு கிடைத்தது. இதனை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.