ராமாயணக் கதையைக் கொண்டு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு இந்தியில் மது மந்தனா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் கதையை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. பின்பு படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் கடந்த ஆண்டு இணையத்தில் கசிந்து வைரலானது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமலே இருந்து வந்தது. 

அண்மையில் முதல் பாகத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்தது. கடைசி நாளில் ரன்பீர் கபூர் உள்ளிட்ட பல நடிகர்கள் எமோஷ்னலாக விடைபெற்றனர். இப்படம் பிரம்மாண்டமாக கிட்டத்தட்ட ரூ.800 கோடிக்கு மேலான பொருட் செலவில் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் அறிவிப்பு தற்போது ஒரு முன்னோட்ட வீடியோவுடன் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும் ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் புகழ் யஷ்ஷும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் லக்‌ஷ்மன் கதாபாத்திரத்தில் ரவி துபேவும் அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோலும் நடிக்கின்றனர். இசையமைப்பாளர்களாக ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இசையமைக்கின்றனர். ஸ்ரீதர் ராகவன் எழுதுகிறார். தயாரிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நமித் மல்ஹோத்ரா தயாரிக்கிறார். 

‘ராமாயணா’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இரண்டாம் பாகம் 2027ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.