
இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. இப்படத்தில் கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் செவன் ஹில்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளன. மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா கவனித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்குகிறது. இப்படம் கடந்த பிப்ரவரியில் நடந்து முடிந்த 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரீமியர் செய்யப்பட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகாமல் இருந்த நிலையில் சமீபத்தில் வெளியானது. அதன்படி இப்படம் ஜூலை 4ஆம் தேதி உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் முதல் பாடலாக ‘சன் ஃப்ளவர்’(Sunflower – not a single not a teaser) பாடல், லிரிக் வீடியோவுடன் நேற்று வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் இப்பாடல் குறித்தும் பாடலின் தலைப்பு குறித்து இயக்குநர் ராம் விளக்கமளித்துள்ளார். அவர் கொடுத்த விளக்கத்தில், “பாடலில், பாடலோடு சில காட்சித் துண்டுகளும் இடம் பெறுவதால் அவ்வாறு பெயரிட்டு இருக்கிறோம். எல்லோரையும் போல் எனக்கும் சூரியகாந்தியை மிகவும் பிடிக்கும். ஒரு நல்ல சூரியோதயத்தில் சூரியகாந்தி தோட்டத்தில் படம் பிடிக்கிற ஒரு அரும் வாய்ப்பு என்னுடைய முதல் படத்தில் எனக்குக் கிடைத்தது. கற்றது தமிழின் இன்னும் ஓர் இரவு பாடலை ஆந்திர மாநிலத்து கடப்பாவின் சூரியகாந்தி தோட்டத்தில் படம் பிடித்தோம். தங்கமீன்களின், ஆனந்த யாழைப் பாடலை சூரியகாந்தி தோட்டத்தில் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்காததால் கேரளாவில் உள்ள அச்சன் கோவிலின் பனிபெய்யும் மலைகள் மீது அப்பாடலுக்காக ஏறினோம். பேரன்பு திரைப்படத்திற்கும் சூரியகாந்தி தோட்டத்திற்கு நடுவில் ஒரு வீடு வேண்டும் என்று தேடினோம்.
அப்போதும் சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்கவில்லை. எனவே அந்த வீட்டை கொடைக்கானல் மன்னவனூர் ஏரிக்கரைக்கு மாற்றினோம். அதற்குப் பின் பறந்து போ-வில் தான் சூரியகாந்தி கதைக்குள் வந்தது. சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்கவில்லை என்றாலும், கர்நாடகத்தில் உள்ள மைசூரில் ஒரு சிறு தோட்டமும், அன்னூரில் ஒரு ஒற்றை சூரியகாந்தி மலரும் கிடைக்கப் பெற்றோம். சூரியகாந்தியை படம்பிடிக்கும் வேட்கை ஒவ்வொரு படத்திலும் கூடிக்கொண்டே இருக்கிறது. ஏனெனில் அது சூர்யகாந்தி.
சூரியகாந்தியை ஒற்றையாகப் பார்த்தாலும் சரி, கூட்டமாகப் பார்த்தாலும் சரி. அதை குறித்து நினைத்தாலும் சரி அது தரும் உற்சாகமும் பரவசமும் ஒன்றே. அதன் நிறத்தில் ஒளிரும் கட்டுக்கடங்காத இளம்பிரியத்தை நாம் நம் காலத்தில் பால்யகாலப் பிரியம் என்றும் பப்பி லவ் என்றும் வெவ்வேறு பெயர்களில் அழைத்திருந்தோம். இன்று நம்முடைய மகள்களும் மகன்களும் அதே பிரியத்தை க்ரஷ் என்று அழைக்கிறார்கள்.
சூரியகாந்தி, க்ரஷிற்கான மலர், கட்டுக்கடங்காத இளம் பிரியத்தின் மலர் என்று எனக்குத் தோன்றியது. ஒரு அப்பாவின் பால்யமும் மகனின் பால்யமும் ஒன்று சேருகிற பாடல்தான் சன் ஃப்ளவர். மதன் கார்க்கியின் வரிகளில், விஜய் யேசுதாஸ் பாட, சந்தோஷ் தயாநிதி இசை அமைத்திருக்கிறார். ஜூலை 4 பறந்து போ திரையரங்குகளில் வெளியாகும் சமயத்தில் ஊரெல்லாம் சூரியகாந்தி பூத்திருக்கும். சூரியகாந்தி பூக்கும் காலம் அது. சூரியகாந்தி பூக்களோடு பறந்து போ திரைப்படம் பார்க்க வாருங்கள். சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜு வர்க்கீஸ், விஜய் யேசுதாஸ், மற்றும் சில குட்டிபிசாசுகளும் உங்களுக்காக காத்துக்கொண்டிருப்பார்கள். இளம்பிரியமும் உற்சாகமும் அமைதியும் உங்களை சூழட்டுமாக” என குறிப்பிட்டுள்ளார்.