Skip to main content

'தோழர்' சந்தோஷ் நாராயணன் என்று போட்டேன்...உடனே சிலர் என்னைத் தொடர்புகொண்டு... - ராஜூமுருகன் விளக்கம் 

Published on 23/01/2019 | Edited on 23/01/2019
rajumurugan

 

ஒலிம்பியா மூவில் சார்பில் எஸ் அம்பேத்குமார் தயாரித்திருக்கும் 'ஜிப்ஸி' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்அம்பேத்குமார், ஒளிப்பதிவாளர் எஸ் கே செல்வகுமார், படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்டா, பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குநர் ராஜுமுருகன், படத்தின் நாயகன் நடிகர் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் இயக்குனர் ராஜூமுருகன் படம் குறித்து பேசும்போது...

 

"இந்த படத்திற்கு அடையாளமாக இருக்கும் இந்த பாடலை முதன்முதலாக ஊடகவியலாளர்கள் முன் திரையிடவேண்டும் என்று விரும்பினேன். தயாரிப்பாளர் அம்பேத்குமார் அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் இந்த படத்தை இந்த தரத்தில் தற்போது எடுத்திருக்க இயலாது. அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் அரசியல் படமல்ல. ஒரு அமைப்பு சார்ந்து எடுக்கப்பட்ட படமல்ல. ஒரு நியாயமான படம். என்னைப் பொருத்தவரை வாழ்க்கையும் அரசியலும் வேறுவேறு அல்ல. இந்த படத்திற்கு ‘தோழர் சந்தோஷ் நாராயணன் இசையில்’ என்று விளம்பரப்படுத்தினேன். உடனே சிலர் என்னைத் தொடர்பு கொண்டு ஏன் சந்தோஷ் நாராயணனை தோழர் ஆக்கிவிட்டீர்கள்? என  கேட்டார்கள். தோழர் என்பது உலகின் உன்னதமான வார்த்தை. தோழர் என்பது ஒரு கட்சி சார்ந்த வார்த்தையல்ல. தோழர் என்பது அன்பின் வார்த்தை. அதன் பொருளை தற்போது மாற்றிவிட்டார்கள். 

 

 

யாரெல்லாம் நீதிக்காக போராடுகிறார்களோ அவர்களையெல்லாம் தோழர் என்று அழைக்கலாம். அநீதிக்கு எதிராக தன்னை ஏதேனும் ஒரு தளத்தில் நிறுத்தி போராடுகிறார்களோ அவர்களையெல்லாம் தோழர் என்று அழைக்கலாம்.அந்த வகையில் இந்த படத்தில் ஜிப்ஸியும் ஒரு தோழன் தான். ஒரு தோழனின் குரலாகத் தான் ஜிப்ஸி இருக்கிறது. இந்த படம் லவ் வித் மியூசிக்கலி படம். இந்த படத்தில் ஒன்பது பாடல்கள் இருக்கிறது. அதில் சிறிது அரசியல் கலந்திருக்கிறது. அதிலும் எளிய மக்களின் நியாயமான அரசியல் பேசப்பட்டிருக்கிறது. இந்த படம் வெளியாகி தயாரிப்பாளர் செய்த முதலீடு அவருக்கு திரும்ப கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான அனைத்து கமர்சியல் அம்சங்களும் இதில் இருக்கிறது. இதற்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்த பாடலில் தோன்றிய தோழர் நல்லக்கண்ணு ஐயா உள்ளிட்ட உண்மையான கள போராளிகளுக்கும் நன்றி" என்றார்.

 

'ஜிப்ஸி' படத்தில் ஜீவா, நடாசா சிங், ஸன்னி வைய்ன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ராம் சிங், கருணா பிரசாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இந்த படத்தில் ‘சே ’என்ற பெயரில் குதிரை ஒன்றும் நடித்திருக்கிறது.
 

 

சார்ந்த செய்திகள்