rajnikanth

Advertisment

கரோனா அச்சுறுத்தல் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 40,000க்கும் மேலானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மே3 ஆம் தேதியுடன் லாக்டவுன் முடியும் என்று எதிர்பார்க்கையில் சில தளர்வுகளுடன் மே17 ஆம் தேதிவரை லாக்டவுனை நீட்டித்துள்ளது இந்திய உள்துறை அமைச்சகம்.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூர், ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளின் சிறப்பு வார்டுகள் நிரம்பியுள்ளன. இதன் காரணமாகத் தனியார் கல்லூரிகள் மற்றும் மணப்பாக்கம் வர்த்தக மையத்தில் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே மேலும் 50,000 படுக்கைகள் தயார் செய்ய சென்னையிலுள்ள திருமண மண்டபங்களை ஒப்படைக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்தார்.

Advertisment

ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தைக் கரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தக் கேட்டால், கொடுக்கத் தயாராகவுள்ளதாக ரஜினி தரப்பில் முன்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய போது ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், "ராகவேந்திரா மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 3 மாதங்களுக்கு எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது" என்று தெரிவித்ததாகத் தகவல் வெளியானது.

இதனை வைத்து இணையத்தில் பலரும் ரஜினியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. இது தொடர்பாக ரஜினி தரப்போ, "பராமரிப்புப் பணி என்று எந்தவொரு தகவலையும் சொல்லவில்லை" என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

http://onelink.to/nknapp

Advertisment

மேலும் இதுதொடர்பாக விசாரிக்கையில், "எப்போதே மண்டபம் அளிக்கத் தயார் என்று கூறிவிட்டோம். இப்போது மாநகராட்சி வேண்டுகோள் விடுத்தால் கொடுக்கத் தயாராகவே உள்ளோம். ரஜினி இப்போது இருக்கும் சூழலைப் பயன்படுத்தி, அவருக்கு எதிராக இந்த மாதிரி தேவையற்ற வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். உதவி என்றால் ரஜினி எப்போதும் செய்யத் தயாராகவே உள்ளார்" என்று ரஜினி தரப்பு தெரிவித்தது.