90-களில் ஹீரோவாக அறிமுகமாகி இப்போது முக்கிய மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராஜ்கிரண். ஆரம்பக் காலகட்டத்தில் இயக்கவும் செய்திருக்கிறார். முரட்டுத்தனமான லுக்கில் கண்சிவக்க ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டும் இவர், தாய்பாசம், மனைவி பிரிவு என செண்டிமெண்ட் காட்சிகளிலும் பலரது கவனத்தை ஈர்த்து ரசிகர்கள் மனதில் இடம்பெற்றிருந்தார். தொடர்ந்து நடித்து வரும் அவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘ப.பாண்டி’ படத்தில் டைட்டில் ரோலிலும் நடித்திருந்தார்.
கடைசியாக சூரி நடிப்பில் வெளியான ‘மாமன்’ படத்தில் நடித்திருந்தார். இப்போது தனுஷ் இயக்கத்தில் ‘இட்லி கடை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகிறது. இதையடுத்து கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மாமன் பட படப்பிடிப்பில் ராஜ்கிரண், அவரது பழைய படப் பாடலை கேட்டு ரசித்துள்ளார். இதனை மாமன் படத்தில் அவருடன் இணைந்து நடித்த பால சரவணன், தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மாமன் படப் படப்பிடிப்பு இடைவெளியில் எனக்கு பிடித்த ‘சந்தனக் காட்டுக்குள்ளே’ பாடலை போட்டேன், அதுவும் ராஜ்கிரண் சார் இருக்கும் போது. அப்போது இது நடந்தது” என ராஜ்கிரண் கையில் தாளம் போட்டு ரசித்து, கேட்டுக்கொண்டிருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் இளையராஜாவையும் புகழ்ந்துள்ளார். ராஜ்கிரண் - இளையராஜா கூட்டணியில் 1995ஆம் ஆண்டு வெளியான படம் ‘எல்லாமே என் ராசாதான்’. இப்படத்தில் இடம்பெற்ற ‘ஒரு சந்தன காட்டுக்குள்ளே...’ பாடல் இன்றளவும் பலரது ஃபேவரட் பாடலாக இருந்து வருகிறது. இப்பாடலை இளையராஜா மற்றும் ஜானகி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். வாலி எழுதியுள்ளார். இப்படத்தை ராஜ்கிரண் நடித்ததோடு இயக்கி தயாரித்தும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.