ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் சிவராஜ்குமார், சுராஜ் வெஞ்சரமூடு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. 

Advertisment

ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து கமலுடன் இணைந்து ரஜினி நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் திரை வட்டாரங்கள் தெரிவித்தன. இத்தகவலைக் கமல் சமீபத்திய ஒரு விருது நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தியிருந்தார். அதாவது ரஜினியும் அவரும் இணைந்து நடிப்பதாக உறுதிப்படுத்திய அவர் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் குறித்த அப்டேட்டுகளை உறுதிப்படுத்தவில்லை. 

இந்த நிலையில் ரஜினி தற்போது கமலுடன் இணைந்து நடிக்கும் படம் குறித்து பேசியுள்ளார். ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக பாலக்காடு செல்லும் ரஜினி சென்னை விமான நிலையத்தில் வருகை தந்த போது அவரிடம் கமலுடன் இணையும் படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர்,   “ராஜ்கமல் - ரெட் ஜெயண்ட் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கப்போறேன். இன்னும் டைரக்டர் ஃபிக்ஸ் ஆகவில்லை. நானும் கமலும் சேர்ந்து நடிக்கனும்னு ஆசை. அதுக்கான கதையும் கதாபாத்திரமும் கிடைக்கனும். அப்படி கிடைச்சா நடிப்போம்” என்றார். பின்பு அவரிடம் இன்று பெரியார் மற்றும் பிரதமர் மோடியின் பிறந்தநாள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி முடித்துக் கொண்டார். இதனிடையே தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு மட்டும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.