லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படம் ஏ சான்றிதழுடன் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்தின் முன்னோட்ட விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது பட அனுபவங்களைப் பகிர்ந்தனர். அந்த வகையில் ரஜினி, படத்தை தாண்டி பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். அவர் பேசுகையில், “நான் முன்பு கூலி வேலை செய்யும் போது நிறைய திட்டு வாங்கியிருக்கேன். ஒரு நாள் ஒருவர் அவரது லக்கேஜை டெம்போவில் ஏத்திவைக்க சொல்லி 2 ரூபாய் கொடுத்து டிப்ஸாக வைத்து கொள் என்றார். அவர் குரல் எனக்கு தெரிந்த குரலாக இருந்தது. அப்புறம் தான் தெரிந்தது அவர் என் காலேஜில் கூட படித்தவன். அவனை காலேஜில் நிறைய கலாய்த்திருக்கிறேன். அதனால் ‘என்ன ஆட்டம் ஆடுன நீ’ என சொன்னான். அப்போது தான் என் வாழ்க்கையில் முதன் முறை அழுதேன்.

என்னதான் பணம் பெயர் புகழ் என எல்லாம் இருந்தாலும் வீட்டுக்குள் நிம்மதி, வெளியே கவுரவம் இல்லாவிட்டால் எதுவுமே இல்லை” என்றார். சத்யராஜ் குறித்து பேசுகையில், “எனக்கும் சத்யராஜுக்கும் கருத்தியல் ரீதியா முரண்பாடு இருக்கலாம்.. ஆனால் அவர் மனசுல பட்டதை சொல்லிட்டு போயிடுவார். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் நபர்களை நம்பிவிடலாம். ஆனால் உள்ளே ஒன்று வைத்து வெளியே வேறு விதமாக பேசுபவர்களை நம்ப கூடாது” என்றார். 

லோகேஷ் கனகராஜ் குறித்து பேசுகையில், “கதை சொல்ல வந்த போது அவர் கமல் ரசிகன் என சொன்னார். யோவ்... நான் கேட்டனா. அப்புறம் எதுக்கு. அதாவது இந்தக் கதை பஞ்ச் டயலாக் சொல்ற கதை இல்ல. அறிவார்ந்த கதைன்னு இன்-டேரக்டா சொல்றார்” என்றார். நாகர்ஜூனா குறித்து பேசுகையில், “மங்காத்தா படத்தில் வெங்கட் பிரபு, அஜித்துக்கு எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது என எழுதியிருந்தார். அந்த கேரக்டர் போல் நாகர்ஜூனா நடித்திருக்கிறார்” என்றார். மேலும் படத்தின் நடனமாடியது குறித்து பேசிய ரஜினி, “சாண்டி மாஸ்டரிடம், நான் 1950 மாடல், லட்சம் கிலோ மீட்டர் ஓடி இருக்கிறேன். பாடி பார்ட்ஸ் எல்லாம் உடலில் மாற்றி இருக்குறாங்க. ரொம்ப ஆட வைச்சிறாதீங்க. பார்ட்ஸ் எல்லாம் கழண்டுடும். அதனால் பார்த்து ஆட வையுங்க என கூறினேன்” என்றார்.