Skip to main content

"என்னங்க மணிரத்னம் இப்படி பண்றாரு..." - கமலிடம் கலங்கிய ரஜினி

 

rajinikanth shares thalapathy movie memories ponniyin selvan audio launch

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் பான் இந்தியா படமாக வரும் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று முந்தினம் நடைபெற்றது. 

 

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரஜினி, தளபதி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “அப்போது தளபதி படத்தின்போது ஹிந்தி படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்தேன். மணி சாருடன் முதல் காம்பினேஷன். முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்று, நல்லா பளிச்சின்னு மேக்கப் போட சொன்னேன். ஏன்னா, மம்முட்டி ஆப்பிள் நிறம் போல் இருப்பார்..  நான் கருப்பாக இருந்தேன். 

 

என் ஸ்டைலில் மேக்கப் போட்டுக் கொண்டு காஸ்டியூமை கொண்டு வர சொன்னேன். எனக்கு லூசா பேண்ட், பனியன், செப்பல் கொடுத்தார்கள். அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி, நான் வழக்கமாக அணியும் பேண்ட், சர்ட் அப்புறம் நான் போட்டிருந்த வாக்கிங் ஷூ அணிந்து கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு போனேன். மணி சார் என்னை பார்த்ததும், என்ன இன்னும் டிரஸ் சேஞ்ச் பண்ணலையா? சேஞ்ச் பண்ணிட்டு வந்திருங்கன்னு சொன்னார். 

 

மாத்தியாச்சு சார் இதுதான்னு சொன்னேன். அவரும் சரின்னு சொல்லிட்டு. அவர் டெக்னீஷியன்ஸ் கூட டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தார். ரொம்ப நேரமாச்சி   வெயிட் பண்ணிக்கிட்டே இருந்தேன். ஷூட்டிங் ஆரம்பிக்கவே இல்ல. முதல் நாள் ஷூட்டிங் ஷோபனாக் கூட, ஷோபனா எல்லாரையும் கலாய்க்கிற பார்ட்டி. அவர்கிட்ட கேட்டா சரியா தெரியும்ன்னு நினைச்சி, என்ன நடக்கிறது, இன்னும் ஒரு காட்சி கூட ஆரம்பிக்கவே இல்லன்னு  கேட்டேன். 

 

 

அவரும் விசாரிச்சுக்கிட்டு வந்து, என்னாச்சி.. டைரக்டருக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா.. இன்னைக்கு ஷூட்டிங் முதல் நாள்.. வந்ததுக்கு ஷூட்டிங் முடிச்சி அனுப்பி வைச்சுட்டு.. அப்புறம் ஹீரோவா கமல போட்டுடலாம்ன்னு பேசிகிட்டிருக்காங்கன்னு சொன்னதும், அப்பதான் புரிஞ்சது. நம்ம இஷ்டத்துக்கு மேக்கப் டிரஸ், ஷூவெல்லாம் போட்டுக் கிட்டு வந்தது தப்புன்னு புரிஞ்சது. முதல் நாளே என் கிட்ட இதெல்லாம் சொல்லி எப்படி புரிய வைக்கிறது என்று, அதுக்கு ஹீரோவை மாத்திடலாம் என்பதை மணி சொல்ல  கேள்விப்பட்ட பிறகு அப்புறம் போய் அவங்க சொன்னபடி எல்லாத்தையும் மாத்தி கொண்டு வந்து நடிச்சேன். அப்படி மணி சார் ஒரு கண்டிஷனான இயக்குநர்.  

 

இப்படயே  மூணு நாள் ஷூட்டிங் போய்கிட்டிருக்கு. நம்ம எப்பவுமே ஒவ்வொரு காட்சியிலுமே எப்படி நடிக்கணும்னு ஒரு 'டெம்ப்ளேட்' வெச்சிருப்போம். இதிலேயும் அப்படிதான் நடிச்சுக்கிட்டிருந்தேன். ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது இன்னும் ஃபீல்... கொடுங்கன்னு திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டேயிருந்தார். இதுக்கு மேல என்ன ஃபீல் பண்ண.. நாமதான் ஒரு டெம்ப்ளேட் வைச்சிருக்கோமே..அப்படிதான் நடித்து முடித்தேன். 

 

நான் அப்போ நடிச்சிகிட்டு இருந்ததெல்லாம், ‘தூக்குடா.. அடிடா.. அப்படித்தான்’.எப்படியோ அன்னைக்கு ஷூட்டிங் முடிந்தது. தினமும் இது இப்படியே போய்க்கிட்டு இருந்தா சரியா வராதுன்னு நினைச்சி, கமலுக்கு போன் பண்ணி.. ஒரு  சீனுக்கு 10 டேக்.. 12 டேக்கெல்லாம் எடுக்குறாரு. இன்னும் கொஞ்சம் ஃபீல் பண்ணி நடிக்க சொல்றாரு. அப்படி நடந்ததை எல்லாம் சொன்னேன். 

 

மணி படம் நீங்க நடிக்கும் போதே நான் நினைச்சேன். சரியா மாட்டுனீங்களா.. மணி கிட்ட நான் எவ்வளவு அனுபவிச்சிருப்பேன்.. அப்படின்னார். சரி இப்போ என்ன பண்ணலாம்னு கேட்டேன், “ஒண்ணு பண்ணுங்க, எப்படி நடிக்கணும்னு அவரையே நடிச்சுக் காட்டச் சொல்லி, அதை அப்படியே மனசுல ஏத்திக்கிட்ட மாதிரி பொய்யா அதை அப்படியே நடிச்சிருங்க”என்று சொன்னார். 

 

நானும் கமல் சொன்னது மாதிரி மணிகிட்ட நடிச்சி காட்டச் சொல்லி, அதை அப்படியே தம் பிடிச்சுக் கிட்டு அங்கு இங்குமா நடந்து கிட்டு பெருசா பீல் பண்ண மாதிரி பொய் சொல்லித்தான் மணிகிட்ட நடிச்சு முடிச்சேன்” என்றார். ரஜினி நடந்ததை கூற கூற அரங்கத்தில் இருந்த  மணிரத்னம் உள்பட அனைவரும் சிரிப்பலையில் மிதந்தனர்.