
தமிழ் சினிமாவில் 'எவர்கிரீன் மூவி இன்டர்நேஷனல்' என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் 'பிதாமகன்', ‘கஜேந்திரா' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் வி.ஏ.துரை. ரஜினியின் 'பாபா' படத்தில் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தயாரித்த கஜேந்திரா படம் எதிர்பார்த்த அளவு போகாததால் மிகப்பெரிய பணநெருக்கடியை சந்தித்ததாகவும் கடனாளியானதாகவும் கூறப்படுகிறது.

இவர் சமீபத்தில் நீரிழிவு நோய் காரணமாக அவதிப்பட்டு வருவதாக மருத்துவ உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இவரது நிலைமையை அறிந்து சூர்யா ரூ. 2 லட்சம் வழங்கியுள்ளதாகவும் தயாரிப்பாளர் சங்க செயலாளர் மன்னன் உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனிடையே மற்றொரு வீடியோவில், "ரஜினி சார் என் மேல் உயிரே வைச்சிருப்பாரு. நானும் அவரும் 40 வருட நண்பர்" என கண்ணீர் மல்க ரஜினியிடம் பண உதவி கேட்டிருந்தார்.
இந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலான நிலையில் தற்போது ரஜினிகாந்த் வி.ஏ.துரையிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மருத்துவ செலவை பார்த்துக்கொள்வதாக நம்பிக்கை தெரிவித்துள்ளாகவும் சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் படப்பிடிப்பில் இருப்பதால் முடிந்தவுடன் நேரில் சென்று சந்திக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ராகவா லாரன்ஸ் ரூ. 5 லட்சம் வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.