'கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள கன்னடப் படம் 'காந்தாரா'. சமீபத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு கடந்த 15ஆம் தேதி வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் மற்றும்சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் காந்தாரா படத்தைப் பார்த்து படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தெரிந்ததை விட தெரியாதது அதிகம்என்பதை இதைவிட யாரும் மிகச் சிறப்பாக சொல்லியிருக்க முடியாது. காந்தாரா படம் பார்க்கையில் என் உடல் சிலிர்த்துவிட்டது. எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகராகப் பணியாற்றியுள்ள ரிஷப் ஷெட்டிக்கு ஹாட்ஸ் ஆஃப். இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படத்தைக் கொடுத்ததற்காக ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் பாராட்டுக்கு, ரிஷப் ஷெட்டி, "ரஜினிகாந்த் சார். நீங்கள் இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்.நான் சிறுவயதில் இருந்தே உங்கள் ரசிகன். உங்கள் பாராட்டு என் கனவை நனவாக்கியது மற்றும் இது போன்று கதைகளை இன்னும் உருவாக்கத்தூண்டுகிறது. நன்றி ரஜினிகாந்த்சார்." எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக தனுஷ் இப்படத்தைப் பார்த்து, ‘பிரம்மிப்பாக இருந்தது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்’ எனப் பாராட்டியிருந்தார். சிம்பு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு கேக் அனுப்பி தனது பாராட்டைத்தெரிவித்திருந்தார். மேலும் கார்த்திரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்துப் பாராட்டு தெரிவித்தார். அண்மையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் பரிந்துரையாக ‘காந்தாரா’ இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.