கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் அமரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தைஉருவாக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையில் தீபாவளியன்று(31.10.2024) வெளியான இப்படம் முதல் நாள் மட்டும் ரூ.42.3 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு தெரிவித்திருந்துள்ளது.
இப்படத்தை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பாராட்டி இருந்தனர். மேலும் திரைத்துறையிலிருந்தது இயக்குநர்கள் அட்லீ, அஷ்வத் மாரிமுத்து மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர். இன்று காலை(02.11.2024) அமரன் படக்குழுவை ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் அமரன் படக்குழுவை அழைத்து பாராட்டிய வீடியோ வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனம், தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ரஜினிகாந்த்,“அமரன் படம் பார்த்தேன். இந்த படத்தை அருமையான விதத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். சிவாகார்த்திகேயன் கெரியரில் அமரன் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும். அந்தளவிற்கு நன்றாக நடித்திருக்கிறார். சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படம் பார்த்து முடிக்கும்போது அழுகையை நிறுத்தமுடிவில்லை. இந்த படத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் தொடர்பு இருக்கிறது. என்னுடைய இளைய அண்ணன் நாகேஸ்வர ராவ் 14 வருடம் இராணுவ வீரராக இருந்தார். சீனப் போரின் போது அவர் முதுகில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதுபோன்ற சில நினைவுகளை இப்படத்துடன் என்னால் தொடர்பு படுத்திகொள்ள முடிந்தது.
இந்த படம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம், இராணுவ வீரர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் நம்மை பாதுகாக்கவில்லையென்றால் நம் எல்லோரும் ஒன்றுமே கிடையாது. படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸின் அப்பா, முதலில் கல்யாணத்திற்கு ஓப்புக்கொள்ளாமல் இருப்பார் அதன் பிறகு இராணுவ உடையை பார்த்ததும் கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்வார். அந்தளவிற்கு இராணுவ வீரர்களை இராணுவ உடையில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். உண்மையிலேயே இந்த மாதிரி ஒரு படத்தை கமல்ஹாசன் தாயாரித்ததற்கு எவ்வளவு பாராட்டு சொன்னாலும் பத்தாது. தயவு செய்து எல்லோரும் இந்த படத்தை பாருங்கள். இந்தியன் என்கிற உணர்வு இந்த படத்தில் வருகிறது. கிரேட் முகுந்த்... ஜெய் ஹிந்த்” என்று பேசியுள்ளார்.