ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களின் கல்வியைமேம்படுத்த ரசிகர்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்த் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 100 மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் எனரசிகர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் வி.எம் சுதாகர் கடந்த 14 ஆம் தேதி அறிவித்திருந்தார். அதன்படி தற்போதுடிஎன்பிஎஸ்சி தேர்வு பயிற்சிக்காக http://rajinikanthfoundation.org என்ற இணையதளத்தை ரஜினிகாந்த் அறக்கட்டளை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இந்திய திரைத்துறையின் சூப்பர் ஸ்டார் பத்மபூஷன் ரஜினிகாந்த் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வியை மேம்படுத்தி அதன் மூலம் ஒரு முற்போக்கான சிந்தனை, தலைமைத்துவம், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகமயமாக்கப்பட்ட கல்வி மற்றும் நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றை அமைப்பதற்காக உருவாக்கப்பட்டது. எங்களுக்கு உலகளாவிய பார்வை இருந்தாலும் எங்களது ஆரம்ப முயற்சிகளை தமிழ்நாட்டில் மட்டுமே எடுக்க விரும்புகிறோம். தமிழ்நாட்டு மக்களின் கருணையும் அன்பும்தான் தனக்கு இவ்வளவு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது என்று சூப்பர் ஸ்டார் எப்போதும் கூறுவார். எனவே இந்த அறக்கட்டளை தமிழகத்திலிருந்து தொடங்கப்படும்.அறக்கட்டளை சிறிய ஆரம்பம், முயற்சி, சுயதிருத்தம், பிறகு இதுவே இறுதியில் மகத்தான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற கருத்தை நம்புகிறது. தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஆசியுடன், இலவச டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு பயிற்சிக்கான சூப்பர் 100 பிரிவு பதிவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதில் பதிவு செய்யhttp://rajinikanthfoundation.org/tnpsc.htmlஎன்ற இணையதள முகவரியை பின் தொடரவும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.