கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமா துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பிறகு சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அந்தவகையில் ஏற்கனவே ஃபெப்சிக்கு ரூ.50 லட்சம் வழங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று கரோனா அச்சுறுத்தலால் வேலையின்றி கஷ்டப்படும் இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். இந்நிலையில் தற்போது இதேபோல் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்....

''உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்படத்துறை சார்ந்த அனைத்து தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இச்சூழ்நிலையில் திரை நட்சத்திரங்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இச்சூழ்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தைச் சேர்ந்த 1000 உறுப்பினர்களுக்கு சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கி உள்ளார்.
சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் சார்பாக மிகுந்த நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். நிவாரணப் பொருட்களை 25.4.2020, 26.4.2020, 27.4.2020 ஆகிய மூன்று தினங்களில் சாலிகிராமத்தில் அமைந்துள்ள செந்தில் ஸ்டுடியோ வளாகத்தில் காலை 6 மணி முதல் காலை 8 மணிவரை உறுப்பினர்கள் தங்களுடைய தென்னிந்திய நடிகர் சங்க அடையாள அட்டையுடன் நேரில் வருகை தந்து பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்'' எனக் குறிப்பிட்டுள்ளனர்.