
தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை (01.03.2023) நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் அவரது 70 ஆண்டுக்கால வாழ்க்கை பயணத்தை வெளிக்காட்டும் வகையில் புகைப்படக் கண்காட்சி வடசென்னை மாவட்ட திமுக சார்பாக அமைச்சர் சேகர்பாபுவின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது பிறந்தநாளை எந்தவிதமான அலங்காரமும் ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையாகக் கொண்டாட வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே இன்று முதலே தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ரஜினிகாந்த் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "என்னுடைய இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்தோடும் மன நிம்மதியோடும் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று அவரது 70வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துகிறேன்" எனப் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதல்வரும் ரஜினியும் நீண்டகாலமாக நல்ல நட்போடு பழகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.