Skip to main content

“சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜ்” - ரஜினிகாந்த்

Published on 05/07/2023 | Edited on 05/07/2023

 

rajinikanth about maamannan

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

அரசியல் அதிகாரத்தில் சம பங்களிப்பு பற்றிப் பேசியிருக்கும் இப்படம் பல நிஜ சம்பவங்களை நினைவுபடுத்துவதாக கூறி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது. படத்தின் வெற்றியை ஏ.ஆர்.ரஹ்மான், உதயநிதி, மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் வெற்றியின் காரணமாக மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் பரிசளித்தது ரெட் ஜெயண்ட் நிறுவனம். இதையடுத்து படத்தின் வெற்றியை முன்னிட்டு படத்தின் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரை சந்தித்து வாழ்த்தி நன்றி கூறினார் உதயநிதி. பின்பு கிருத்திகா உதயநிதியுடன் படக்குழு கேக் வெட்டி மகிழ்ந்தது. 

 

இந்நிலையில் இப்படத்திற்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

இதையடுத்து ரஜினியின் பாராட்டுக்கு மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி தங்களது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளனர். உதயநிதி பதிவில், "சமத்துவம் போற்றும் மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்து அன்போடு வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருக்கு படக்குழு சார்பில் அன்பும், நன்றியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மாரி செல்வராஜ், "என் முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும் கர்ணனையும் பார்த்து பாராட்டியதை போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும் பெரும் ப்ரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருக்கு என் இதயத்திலிருந்து நிரம்பி வழியும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘முடிச்சிடலாம்...’ - வெளியான ‘ரஜினி 171’ பட அப்டேட்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
thalaivar 171 titled as coolie

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இப்படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து ஸ்ருதிஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு கூலி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசரில், தங்கம் கடத்தும் குடோனுக்குள், ரஜினி செல்கிறார். அங்கு அந்தக் கும்பலை அடித்துபோடுவது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. சண்டை காட்சிகள் நிறைந்த இந்த டீசரில் ரஜினி, வசனம் பேசிக்கொண்டே அக்கும்பலை தாக்குகிறார். “அப்பாவும் தாத்தாவும், வந்தார்கள் போனார்கள். தப்பென்ன, சரியென்ன, எப்போதும் விளையாடு. அடப்பாவி என்பார்கள், தப்பாக நினைக்காதே. எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே,... சோறுண்டு, சுகமுண்டு, மதுவுண்டு, மாதுண்டு, மனமுண்டு என்றாலே, சொர்கத்தில் இடமுண்டு” என்று அவர் ஏற்கெனவே அவர் படத்தில் பேசும் வசனம் இடம்பெறுகிறது.

மேலும் இறுதியில் ‘முடிச்சிடலாம் மா...’ ரஜினி சிரித்து கொண்டே பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் தங்க கடத்தலை வைத்து உருவாகுவது போல் தெரியும் சூழலில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த தெலுங்கானா முதல்வர்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Telangana Congress Chief Minister says Udhayanidhi Stalin must be punished

சென்னையில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இது தொடர்பாக, வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அதன்படி, சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துகள் தவறானது என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி தெலுங்கானா மாநிலத்தில், அம்முதல்வர் ரேவந்த் ரெட்டி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் கூறிய கருத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கள் தவறானது. அது அவருடைய சிந்தனை. சனாதனம் குறித்து அவருடைய கருத்திற்காக அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.