“அந்த தாய் கதறும்போது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது” - ரஜினிகாந்த் 

rajini wishes mari selvaraj vaazhai movie

மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை மையக்கருவாக வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் வாழை. இப்படத்தை மாரி செல்வராஜும் அவரது மனைவி திவ்யாவும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்க அவர்களுடன் இணைந்து கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்திருந்தார். இப்படம் கடந்த 23ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தினை பார்த்து திருமாவளவன் எம்.பி., சீமான், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வெற்றி மாறன், பா.ரஞ்சித், ராம், நெல்சன், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்களும் பாராட்டினர். இதனிடையே பாலா, ஜிப்ரான், ஆர்.ஜே. பாலாஜி, ‘கொட்டுக்காளி’ இயக்குநர் வினோத், நித்திலன் சாமிநாதன், யோகி பாபு, ‘சித்தா’ பட இயக்குநர் அருண் உள்ளிட்ட பிரபலங்கள் வாழை படத்தை பாராட்டி பேசியிருந்தனர்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இப்படத்திற்கு இன்று காலை பாராட்டு தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி. காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம். தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரிக்கு மீண்டும் வாழ்த்துகள்” என்று பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த இப்படத்தை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையை மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அந்த அறிக்கையில், “மாரி செல்வராஜின் வாழை படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம். தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு. மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது. மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குநர் என்பதை இந்த படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார். மாரி செல்வராஜுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்” என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்பு மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற மாமன்னன் படத்தை ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணைந்து ஒரு படம் பண்ண பேச்சு வார்த்தை நடந்ததாக மாரி செல்வராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Rajinikanth mari selvaraj
இதையும் படியுங்கள்
Subscribe