இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான படம் ‘மகாராஜா’. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ இணைந்து தயாரித்திருந்த இப்படம், விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும். பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்றது.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய இத்திரைப்படம், வித்தியாசமான முறையில் திரைக்கதை வடிவமைத்து ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் வெகுவாக பாராட்டைபெற்றது. மேலும் இப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் நிலையில் 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. இப்படத்தின் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினரை விஜய் நேரில் அழைத்து பாராட்டினார். அந்த சந்திப்பு குறித்து நித்திலன் சாமிநாதன், தனது எக்ஸ் பக்கத்தில் மகாராஜாவைப் பற்றி அவர் கூறிய விவரங்கள் நெகிழவைத்திருந்ததாகப் பாராட்டியிருந்தார்.
இதையடுத்து இப்படம் இந்தியில் ரீமேக்காகவுள்ளதாக தகவல் வெளியானது. பாலிவுட் முன்னணி நடிகரான அமீர் கான் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியிருப்பதாகவும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இயக்குநர் நித்திலன் சாமிநாதனை ரஜினிகாந்த் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நித்திலன் சாமிநாதன், “டியர் ரஜினிகாந்த் சார், உங்களின் சந்திப்பிற்கு நன்றி. இந்த சந்திப்பு வாழ்க்கையைப் பற்றி ஒரு நாவல் படித்த அனுபவத்தைத் தந்தது. கோலிவுட்டின் தங்கக் கைகளிலிருந்து வாழ்க்கை, அனுபவம், பற்றிய புரிதலைத் தெரிந்து கொண்டது போல் இருந்தது. உங்களின் விருந்தோம்பலும் பணிவும் என்னை வியக்கவைத்தது. மகாராஜா படம் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.