
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குனர் சிவா இயக்கிவரும் படம் 'அண்ணாத்த'. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. மேலும் ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. பின்பு அவர் உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வெடுத்து வந்தார்.

இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது. அதில்ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் மீண்டும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதற்காக, ரஜினி நேற்று தனி விமானத்தில் ஹைதராபாத் கிளம்பிச் சென்றார். அங்கு முன்பைவிட கடும் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அங்கு, 'அண்ணாத்த' படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. 'அண்ணாத்த' படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us