த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன். இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், கிஷோர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, சென்னை, மும்பை, திருநெல்வேலி, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த வருடம் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு (12.12.2023) வாழ்த்து தெரிவிக்கும் விதமாக படக்குழு வீடியோ வெளியிட்டது. அந்த வீடியோ அவரது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் ஆகியோர் இப்படத்திற்கான டப்பிங் பணிகளை சமீபத்தில் தொடங்கினர். இதையடுத்து ஃபகத் பாசில் பிறந்த நாளான கடந்த 8ஆம் தேதி ரஜினிகாந்த, அமிதாப் பச்சன் ஆகியோருடன் ஃபகத் பாசில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்தது.
இப்படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில், அக்டோபர் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் வெளியாகும் என சமீபத்தில் புதிய போஸ்டருன் அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகளை ரஜினி ஆரம்பித்துள்ளதாக தற்போது படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், டப்பிங் செய்து கொண்டிருக்கும் ரஜினி, “டைரக்டர் சார்... இது சூப்பர் சார்” என ஞானவேலைப் பாராட்டுகிறார். இதனால் தற்போது படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.