லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்போது முன்பதிவு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதில் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. 

பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட், சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஜினி பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதன் ஒரு பகுதியில் அவர் பேசியதாவது, “கூலி படத்தின் உண்மையான கதாநாயகன் லோகேஷ் தான். இந்த படத்துக்கு தானாவே எதிர்பார்ப்பு அதிகமாகிடுச்சு. அதுக்கு முதல் முக்கிய காரணம் சன் பிக்சர்ஸ். அப்புறம் வெற்றிகரமான கமர்ஷியல் படங்கள் கொடுத்த லோகேஷுடன் நான் நடிச்சது. அடுத்து பெரிய பெரிய ஆர்டிஸ்ட் கமிட்டானது. பின்பு அனிருத் இசை. மூணு பாட்டுல படத்தை எங்கையோ கொண்டு போய்ட்டார். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், ஆமிர்கான், நாகர்ஜூனா கொடுத்த இண்டர்வியூவ். அவங்க எங்க போனாலும் கூலி படத்த பத்தி சொல்லுங்கன்னு கேள்வி கேட்குறாங்க.

லோகேஷ் கனகராஜ் ஒரு இண்டர்வியூவ்-ல 2 மணி நேரம் 10 நிமிஷம் பேசியிருக்கார். அந்த இண்டர்வியூவ நான் நின்னிட்டு கேட்டேன், உட்காந்துட்டு கேட்டேன், தூங்கிட்டு கேட்டேன் முடியல. தூங்கி எழுந்திருச்சேன் அப்பவும் முடியல. அவரை இண்டர்வியூவ் எடுத்த கோபிநாத் நல்ல திறமையான ஆள். கோர்ட் போட்டுட்டு 50, 60 பேர் இருக்கும் போதே அவங்களுக்கு உள்ள என்ன இருக்குதுன்னு எடுத்துடுவார். அவரை கோர்ட்டை கழட்ட சொல்லி, ஒரு சோஃபா போட்டு கேள்வி கேளுங்கன்னு சொன்னா சும்மாவா விடுவார். என்னை 5,6 வருஷமா கேட்டுகிட்டு இருக்கார். சத்தியமா கொடுக்க மாட்டேன். கொடுத்தா அப்படியே உறிஞ்சுடுவார். 

மொதல்ல படத்தில் வேலை பார்த்த டெக்னீஷியன் பத்தி சொல்லிடுறேன். கேமராமேன் கிரீஷ், ரொம்ப அமைதியா வேலை பார்ப்பவர். நான் பார்த்த ஹேண்ட்சம் கேமராமேன் இவர் தான். அவருக்கும் லோகேஷுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி ரொம்ப சிறப்பு. ஆர்ட் டைரக்டர் சதீஷ், எடிட்டர் பிலோமின், இவங்க எல்லாம் ஆரம்பத்துல இருந்தே லோகேஷுடன் ஒர்க் பண்ணியிருக்காங்க. லோகேஷோட படங்களை எடிட் பன்றதுக்கு ஜேம்ஸ் கேமரூன் பட எடிட்டரால கூட முடியாது. ஆனால் பிலோமின் சரியாக புரிஞ்சிக்கிட்டு பன்னிருக்கார்.

Advertisment

அன்பறிவ் மாஸ்டர்களை நான் கபாலி படத்தில் பார்த்திருக்கேன். இப்போது அவங்களை பார்க்கும் போது ரொம்ப டெக்னாலஜியா அட்வான்ஸா இருக்காங்க. ஹாலிவுட்டுல லேட்டஸ்டா என்ன வந்திருக்கோ அது எல்லாமே அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. சாண்டி மாஸ்டர், முதலில் என்னை பார்த்ததும் சார் தூள் கிளப்பிடலாம் என்றார். நான் அவரிடம், இது 1950 மாடல், லட்சம் கிலோ மீட்டர் ஓடிருக்கு, பார்ட்ஸ் எல்லாம் மாதிருக்காங்க, ரொம்ப ஆடவைக்காதீங்க, அப்படி ஆட வைச்சா பார்ட்ஸ் எல்லாம் கழண்டுடும். அத பார்த்துக்கோங்கன்னு சொன்னேன். அதை வைச்சு என்னை ஆட வைச்சிருக்கார். அதை நீங்க பாருங்க. நான் ரொம்ப மதிக்குற டி.ஆர். சார் இந்த படத்துல இருக்காங்க. ரொம்ப சந்தோஷம். 

அடுத்து அனிருத். அவரைப் பத்தி நான் எவ்ளோ சொன்னாலும் அது கம்மி தான். ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன். புகழின் உச்சியில் இருக்க அவர், இந்த வயசுல அமைதியை தேடி ஹிமாலயாஸ் போறார். அப்போ அவர் எப்பேர்பட்ட ஆளுன்னு நீங்க தெரிஞ்சுக்கோங்க. எனக்கே 44 வயசுலதான் ஹிமாலயாஸ் போனும்னு தோனுச்சு. இந்தியாவின் முதல் ராக்ஸ்டார் அனிருத் தான். அவர் கான்செர்ட்லாம் உடனே டிக்கெட் வித்து தீந்துடுது. அங்க வரவங்க பாட்டை கேட்கவும் வராங்க. அதே சமயம் அவரை பார்க்கவும் பொன்னுங்க வராங்க. தென்கிழக்கு ஆசியாவில் தகுதியான பேச்சுலர் என்றால் அது அனிருத் தான்” என்றார்.