லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்போது முன்பதிவு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதில் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. 

பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட், சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஜினி பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். அவர் பேசியதாவது, “படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பை பாருங்க. நான் உலகநாயகன் பொன்னுடான்னு நிரூபிப்பாங்க. அந்த மாதிரி நடிச்சிருக்காங்க. கமலே பார்த்து சூப்பர் ஸ்ருதின்னு சொல்லலைன்னா நான் என் பேரை மாத்திக்குறேன்” என்றார். 

தொடர்ந்து உடல்நலம் குறித்து பேசிய அவர், “உடலை நாம கண்டுக்காம விட்டா, உடல் நம்மளை தண்டிச்சிடும். உள்ளே இருக்கிற உறுப்புகள், உடற்பயிற்சி செய்டா, இன்னும் நல்லா ஓடுடா, நான் இன்னும் சரியா இயங்கலடான்னு கேட்கும்” என்றார். பின்பு கூலியாக வேலை செய்த நாட்களை நினைவு கூர்ந்தார். அது குறித்து அவர் பேசியதாவது, “முதலில் நான் கூலியாகத்தான் வேலை பார்த்தேன். அப்புறம் தான் கண்டக்டர் ஆனேன். பின்பு தான் நடிகரானேன். கூலியாக வேலை பார்த்த போது ஒரு சம்பவம் நடந்தது, என் அண்ணாவுக்கு என்னை படிக்க வைக்கனும்னு ரொம்ப ஆசை. அப்போது அவருக்கு 90 ரூபாய் தான் சம்பளம். பேப்பர் போட்டு, காய்கறி ஏத்தி சம்பாதிப்பார். அந்த காசில் என்னை காலேஜ் சேர்த்தார். படிப்பு தான் முக்கியம், நீ ஒருத்தர் படிச்சா போதும், குடும்பத்துல எல்லாரும் படிப்பாங்கன்னு சொன்னார்.

எக்ஸாம் ஃபீஸ், அப்போது 120 ரூபாய். கட்ட சொல்லி கொடுத்தாங்க. எனக்கு தெரியும் எப்படியும் நான் பாஸ் ஆக மாட்டேன்னு. அதனால அந்த பணத்தை எடுத்துக்கிட்டு மெட்ராஸ் ஓடி வந்துட்டன். இங்க வந்து, லைட் மேனா ஆகலாம்னு இருந்தேன். அப்போது நடிகராக ஆகனும்னுலாம் ஆசை கிடையாது. லைட் மேன் வேலைக்கு ட்ரை பண்ணேன் கிடைக்கல. சர்வர் வேலைக்கும் ட்ரை பண்ணேன். அதுவும் கிடைக்கல. கொண்டு வந்த பணமும் முடிஞ்சு போச்சு. திருப்பியும் பெங்களுரு போனேன். நம்மல அடிக்க போறாங்கன்னு பயந்துகிட்டே போறேன். எல்லாரும் அமைதியா உட்காந்திருந்தாங்க. நாளையில இருந்து கூலி தூக்கனும்னு சொன்னாங்க. அப்புறம் கூலி வேலை செஞ்சேன். 

Advertisment

ஒரு நாள் 500மீட்டர் தூரத்தில் இருக்கும் வீட்டிற்கு மூட்டை கொண்டு போகும் போது, நடுவில் ரோட் பிளாக் ஆகியிருந்ததால் இரண்டு கிலோ மீட்டர் சுத்தி, போனேன். அதுக்குப்புறம் எங்க இரண்டாவது அண்ணனுக்கு கல்யாணம் ஆனது. அவருடைய மாமனார் டிக்கெட் கலெக்டராக இருந்தார். அவரிடம் எங்க அப்பா, எஸ்.எஸ்.எல்.சி. படிச்சிட்டு மூட்ட தூக்கிட்டு இருக்கான்னு என்னை பத்தி சொல்லியிருக்கார். அப்போது அவர், ஏன் எஸ்.எஸ்.எல்.சி. படிச்சிட்டு மூட்ட தூக்கனும், கண்டக்டர் லைசன்ஸ் போடச் சொல்லுங்கன்னு சொல்லியிருக்கார். அதன் பிறகு தான் கண்டெக்டர் லைசன்ஸ் போட்டு கண்டக்டரானேன். இப்போது நடிகராக இருக்கிறேன்.

அதற்கு உழைப்பும் காரணம் தான். ஆனால் அதற்கு மேலே ஒன்னு இருக்கு. இறைவன். அவன் எல்லோரிடமும் பேசுவான். என்ன செய்ய வேண்டும், எதை பண்ண வேண்டும் என சொல்லுவான். அந்த குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் அதே சமயம் இன்னொரு குரலும் கேட்கும். அதுதான் உங்களுடைய குரல். இந்த இரண்டு குரலுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டும். இறைவன் குரல் எப்போதுமே மற்றவர்களைப் பற்றியும் பேசும். ஆனால் உங்களுடைய குரல் உங்களை மட்டுமே யோசிக்கும். உங்களுடைய குரலை கேட்டால், பணம், பெயர், புகழ் எல்லாமே கிடைக்கும். அது எல்லாம் கொஞ்ச நாள் தான். எவ்ளோ புகழ் வந்தாலும் வீட்டுக்குள்ள நிம்மதி, வெளியில கவுரம் இல்லையென்றால் எந்த பிரயோஜனமும் இல்லை. நான் அந்த இறைவன் குரலை கேட்டு நடந்துகொண்டு இருக்கேன்” என்றார்.