
முதல்வர் ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் சேகர் பாபு ஏற்பாட்டில் வடசென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் "எங்கள் முதல்வர்; எங்கள் பெருமை' என்கிற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த புகைப்பட கண்காட்சியை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் திறந்து வைத்திருந்த நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வந்து பார்வையிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது இந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டுள்ளார். அவருடன் நடிகர் யோகிபாபுவும் கலந்து கொண்டு பார்வையிட்டார். உடன் அமைச்சர் சேகர் பாபு இருந்தார். கண்காட்சியை பார்த்துவிட்டு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, "ரொம்ப நாளாக அமைச்சர் சேகர் பாபு அழைத்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்பில் இருந்ததால் கண்டிப்பாக பின்பு வருகிறேன் என சொன்னேன். சேகர் பாபு ரொம்ப அன்பானவர், விசுவாசமானவர். அவருக்கு பாட்ஷா மாதிரி இன்னொரு முகமும் இருக்கு. இந்த கண்காட்சியை ரொம்ப நன்றாக வடிவமைத்துள்ளார்.
என்னுடைய நண்பர் முதல்வரின் வாழ்க்கை பயணம் மற்றும் அரசியல் பயணம் இரண்டும் ஒன்றுதான். கிட்டத்தட்ட 54 வருட அரசியல் பயணம். படிப் படியாக முன்னேறி பல பதவிகளை வகித்து தற்போது முதல்வராக இருக்கிறார்; இது அவருடைய உழைப்புக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்" என்றார்.
அப்போது முதல்வருடன் நீங்க எடுத்த புகைப்படம் கண்காட்சியில் இருக்கிறது. அது குறித்த அனுபவங்களை பகிரச் சொல்லி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி, "கேட்ட கேள்விக்கு அவருடன் நான் இருந்த அனுபவங்கள் நிறைய இருக்கு. நேரம் வரும் போது சொல்கிறேன்." என்றார். இந்த கண்காட்சி நாளை (12.03.2023) நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.