கேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு கதை எழுதி மற்றும் திரைக்கதை அமைத்து அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் ‘கண்ணப்பா’. ட்வென்டி ஃபோர் பிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன் பாபு, பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத்குமார், காஜல் அகர்வால், பிரம்மானந்தம், மதுபாலா, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட இன்னும் சில பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சிவபெருமானின் பக்தரான கண்ணப்பரின் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில் படக்குழுவினர் இப்படத்தினை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியான நிலையில் படத்தின் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இப்படம் பல முறை ரிலீஸுக்கு தயாராகி தேதியும் அறிவிக்கப்பட்டு பின்பு வெளியாகாமல் ஒரு வழியாக வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகிறது.
இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிலையில் அதில் பங்கேற்ற நடிகர் ரகு பாபு, கண்ணப்பா படத்தை யாராவது ட்ரோல் செய்தால், அவர்கள் சிவபெருமானின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. பின்பு இப்படத்தின் ஹார்ட் டிஸ்க் தொலைந்து போய்ட்டதாக சர்ச்சைகள் உருவானது. இது தொடர்பாக படக்குழு காவல் துறையில் புகார் கொடுக்க வழக்குப் பதிவு செய்த போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் படத்தின் நாயகன் விஷ்னு மஞ்சு, ரஜினிகாந்த் இப்படத்தை பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நேற்று இரவு ரஜினிகாந்த், கண்ணப்பா படத்தை பார்த்தார். முடித்துவிட்டு என்னை இறுக்கமாக கட்டி பிடித்தார். பின்பு படம் தனக்கு பிடித்ததாக கூறினார். ஒரு நடிகராக இந்த இறுக்கமான கட்டிப்பிடிப்பிற்காக 22 வருஷம் காத்திருந்தேன். இன்று நான் பணிவுடனும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடையவனாகவும் உணர்கிறேன்” என்றார். இந்த சந்திப்பின் போது விஷ்னு மஞ்சுவின் தந்தையாரும் நடிகருமான மோகன் பாபு உடன் இருந்தார். மோகன் பபும் ரஜினியும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இருவரும் நாட்டாமை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.