சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் குறைவான எதிர்பார்ப்பில் நேற்று வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’. இப்படத்தை ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரித்திருக்க சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால் வில்லனாகவும் பிஜு மேனன், ஷபீர், விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். அனிருத் இசைப்பணிகளை மேற்கொண்டுள்ளார். இவரது இசையில் வெளியான ‘சலம்பல’ பாடல் ஹிட்டடித்தது.
சமீபகாலமாக பின்தங்கிய நிலையில் இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படம் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது முழுதாக நிறைவேறவில்லை. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இதனிடையே இப்படத்திற்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு தெரிவித்திருந்தார். சிவகார்த்திகேயனை ஆக்ஷன் ஹீரோவாக மிரட்டுகிறார் எனக் குறிப்பிட்டு பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளதாக சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி எப்படி பாராட்டினார் என்பதையும் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ளதாவது, “மை காட்... எக்செலண்ட், என்ன பெர்ஃபாமன்ஸ், என்ன ஆக்ஷன்ஸ்... சூப்பர் சூப்பர் எஸ்.கே. எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. ஆக்ஷன் ஹீரோ ஆகிட்டீங்க. காட் ப்ளஸ் காட் ப்ளஸ்” எனப் பதிவிட்டுள்ளார். மேலும் அவருடைய அந்த ட்ரேட் மார்க் சிரிப்புடன் வாழ்த்தியதாக தெரிவித்துள்ளார்.
இதனை மகிழ்ச்சியுடன் பகிர்ந்த சிவகார்த்திகேயன், ரஜினியின் வாழ்த்துக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.