/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/188_29.jpg)
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'(Tourist Family).மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்திருந்த இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்த இப்படம் இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து பேசியிருந்தது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பலரது பாராட்டுகளை குவித்து வருகிறது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் இப்படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் ரஜினி இப்படம் தொடர்பாக சசிகுமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை சசிகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார். அவர் பகிர்ந்த பதிவில், “படம் சூப்பர் என யார் சொன்னாலுமே மனம் சொக்கிப் போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் எனச் சொன்னால், சந்தோசத்திற்குச் சொல்லவா வேண்டும். அயோத்தி, நந்தன் படம் பார்த்து பாராட்டிய ரஜினி சார் ஹாட்ரிக் பரவசமாக 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் பார்த்து, ‘சூப்ப்ப்பர் சசிகுமார்...’ என அழுத்திச் சொன்னார்.
‘தர்மதாஸாகவே வாழ்ந்திருக்கீங்க.. சொல்ல வார்த்தையே இல்ல, அந்தளவுக்கு வாழ்ந்துட்டீங்க. பல சீன்களில் கலங்கடிச்சிட்டீங்க. சமீப காலமா உங்களோட கதைத் தேர்வு வியக்க வைக்குது சசிகுமார்...’ என ரஜினி சார் சொல்லச் சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மனதில் நிறுத்தி, அத்தனை பேரின் பங்களிப்பையும் வாழ்த்தி ரஜினி சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் டூரிஸ்ட் ஃபேமிலி படக் குழுவுக்கு கிடைத்த பொக்கிஷ பட்டயம். தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டும் உங்களின் தங்கமான மனசுக்கு மிக்க நன்றி ரஜினி சார்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்தும் ரஜினி தனக்கு அலைபேசி மூலம் பாராட்டியதாககூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)