சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர், திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டுவருகிறது. உலகம் முழுவதும் ரூ.650 கோடியைத்தாண்டி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா தயாரிக்கும் இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து தனது 170வது படமாக 'ஜெய் பீம்' பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாவதாகவும் போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் நானி, ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியானது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ரஜினியின் 171வது படமாக உருவாகும் இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். முன்னதாகலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது.