Skip to main content

‘ஜோதிகா சந்திரமுகி இல்லை, ரஜினிதான் சந்திரமுகி’-  நினைவுகளை ரசிகர்களிடம் பகிர்ந்த பி.வாசு

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

நடிகர் ரஜினிகாந்த நேற்று தனது 70வது பிறந்தநாளை வழக்கம்போல கொண்டாடினார். அவருடைய ரசிகர்களும் வழக்கம்போல வெகு விமரிசையாக பல பிரபலங்களை அழைத்து விழா ஒன்றை நடத்தினர். அதில் கலந்துகொண்டு  இயக்குனர் பி.வாசு பேசுகையில்,  “ஒரு சில ரசிகர் மன்ற விழாக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான விழா ஏனென்றால் ரஜினியின் எழுபது விழா.
 

p.vasu

 

 

நான்  ‘இளமை ஊஞ்சல் ஆடுகிறதே’ என்னும் படத்தில் ஸ்ரீதர் சாருக்கு  துணை இயக்குனரானேன். அப்போது ஸ்ரீதர் சார் அந்த படத்திற்கு வேறு இருவரைதான் மனதில் வைத்து எழுதியிருந்தார். அந்த சமயத்தில்தான் பதினாறு வயதினிலே படத்தை பார்த்து பரட்டை என்கிற கேரக்டர் யாருய்யா செமயாக நடித்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அபூர்வ ராகங்களில் ரஜினி சார் அந்த கேட்டை திறக்கும் ஸ்டான்ஸிலேயே தமிழுக்கு மிகப்பெரிய நடிகன் வந்துவிட்டேன் என்று தெரிவித்துவிடுவார். அச்சமயத்தில் ரஜினி சாரிடம் ஒரு ஈர்ப்பு இருந்தது. அவர் யாரையும் போய் பார்க்க வேண்டாம், அவரைதான் பார்க்க செல்வார்கள். நான் ஸ்ரீதர் சாரிடம் இளமை ஊஞ்சல் ஆடுகிறதே படத்திற்கு ரஜினியும் கமலும் செட் ஆவார்கள் என்று சொன்னேன். அவர் உடனே,  ‘சரி அப்போ போய் நீ அழைச்சிட்டு வா’ என்று சொல்லிவிட்டார். நான் அதுவரை ரஜினி சாரை நேரில் பார்த்ததில்லை, சினிமாவில் பார்த்தது மட்டும்தான். அவர் அப்போது புதுப்பேட்டையில் வசித்து வந்தார், அவருடைய வீட்டுக்கு சென்று,  ‘நான் ஸ்ரீதர் அஸிஸ்டெண்ட் உங்களை பார்த்து அழைத்து வரச்சொன்னார்’ என்றேன். உடனடியாக காரை எடுத்துக்கொண்டு என்னுடன் கிளம்பினார் ரஜினி. அதன்பிறகு அந்த படத்தில் நடிப்பதற்காக ரஜினி தேர்வானார். நான் அந்த படத்தில் உதவி இயக்குனராக இருந்ததைவிட, முழுக்க முழுக்க ஒரு ரசிகனாகதான் அவரை பார்த்தேன். 

அடுத்த நாள் என்ன ஷூட் என்று தினசரி விசாரிப்பார். அதுபோல ஒருநாள் என்னிடம் கேட்க, ‘ஒன்னும் பெரிசா இல்ல, செக் புக்ல கையெழுத்துப் போடுற மாதிரிதான் சார்’ என்று சொன்னேன். அவர்,  ‘வெறும் கையெழுத்துதானா’ என்று கேட்டார். அடுத்த நாள் ஷூட்டில் இயக்குனரிடம் ரஜினி,  ‘சார் நான் இங்கிருந்து நின்னுகிட்டே அவங்களுக்கு கையெழுத்துபோடட்டும்மா’ என்று கேட்டார்.  இயக்குனருக்கும் ஒன்னும் புரியவில்லை, எங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆமாம், இரண்டடி கேப் இருக்கும் அப்படி கெயழுத்துபோடுறேன் சொன்னா யாருதான் யோசிக்க மாட்டங்க. ஷூட் தொடங்கியவுடன் சட்டென்று என்று பேனாவை நீட்ட, அந்த பேனா அந்த செக் புக் வரை நீண்டது. அப்படியே கையெழுத்திட்டார். பின்னர் சட்டென்று இழுக்க பேனா மூடிக்கொண்டது. அப்படி ஒரு சின்ன கையெழுத்திற்கு கூட வீட்டிற்கு சென்று ஹோம்வொர்க் செய்தவர் ரஜினி சார். அதுபோல இருக்கின்ற ரஜினி சாரை அப்போதிலிருந்து பார்த்து வருகிறேன். அவரை இயக்கும் வாய்ப்பு பணக்காரன் படத்தில் கிடைத்தது. அதற்காக அவரது வீட்டிற்கு சென்று பார்க்கப்போனேன். அங்கு போனால் அவர் ஒரு சின்ன கேண்டில் வெளிச்சத்தில் அமர்ந்திருந்தார். அவரை சுற்றிலும் கண்ணாடிகள் அவருடைய முகம் ஆயிரம் பிரதிபலிப்பாக தெரிகிறது. ஏன் சார் இப்படி வச்சிருக்கிங்கனு கேட்டேன் அதற்கு அவர் சொன்னார். இந்த சாதாரன முகடம், தலைகணம் ஏறிவிடக்கூடாது என்பதற்காக என்னுடைய முகத்தை நானே பார்த்துக்கொள்கிறேன் என்றார். என்ன ஒரு அழகான வார்த்தை பாருங்க.

அதேபோல அந்த படத்தில் அழகான ஒரு காட்சி, அவர் ஊட்டிக்கு செல்வதுபோன்று இருக்கும். அப்போது அங்கே அவரை கொலை செய்ய வில்லன்கள் குரூப் வருவார்கள்.  அவர்களை அடித்துவிட்டு தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், தமிழில் பேசுவார். ரொம்ப ஆடாதே திரும்பி போய்டு என்று வில்லன் சொல்வார். அதற்கு அவர்,  ‘இந்த மண் என்னை ஏத்துக்குச்சு, இந்த மக்கள் என்னை ஏத்துக்கிட்டார்கள். இனிமேல் வாழ்ந்தாலும் இங்கேதான், விழுந்தாலும் இங்கேதான். என் கடைசி மூச்சு இந்த மண்னில்தான், இனி ரிட்டையர்டே கிடையாது, இங்கே செட்டில்தான்’ என்பார்.  இந்த மண் அவருடைய மண் என்று அப்போதே சொன்ன விஷயம்தான். 
 

 

அதேபோல உழைப்பாளி படத்தில் ராதாரவி,  ‘யார் நீ’ என்று ரஜினியை பார்த்து கேள்வி கேட்பார். அதற்கு அவர்,  ‘நேற்று உழைப்பாளி, இன்று நடிகன் நாளைக்கு?’ என்று படிக்கட்டில் ஏறி போய்க்கொண்டே இருப்பார். இது 92 ஆம் ஆண்டே சொன்ன விஷயம். அவர் திடீரென்று கேள்விகளெல்லாம் கேட்பார். எதுக்கு சார் நாளைக்குனு சொல்லிட்டு படிமேல போக சொல்றீங்க என்று. அதற்கு நான் இனிமேல் நீங்க மேலேதாம் சார் போகணும் என்றேன். இதுக்குமேலலாம் இந்த லெவல்ல நிக்கவே கூடாது சார் என்று நாங்க அப்போவே சொல்லிட்டோம். 

நடிகர்களை இயக்குவது சுலபம், ஆனால் ஒரு ஸ்டாரை இயக்குவது என்பது ரொம்ப கடினம். அவருக்கு என்று தனி ஷாட்ஸ், பிலாக் என்று யோசித்து ரசிகர்களுக்கு பிடித்ததுபோன்று காட்ட வேண்டும். நீங்களெல்லாம் சந்திரமுகி படம் பார்த்திருப்பீர்கள், அனைவரும் ஜோதிகாவை சந்திரமுகியாக பார்க்குறீர்கள். ஆனால், உண்மையில் சந்திரமுகி ரஜினி சார்தான். அவர் மேக்கப் போட்டு அந்த கதாபாத்திரத்திற்கு தயாராகிவிட்டார் என்றால் அப்படியே வேறாக மாறிவிடுவார். பாபா படத்திற்கு முன்னாடி அவர் வேதனையில் இருந்தார். சந்திரமுகி படத்தை கொடுத்து அவர் எனக்கு வாழ்க்கை தந்தார், ஆனால் அதை அவர் ஒப்புக்கொள்ள மாட்டார். நான் தான் அவருக்கு வாழ்க்கை கொடுத்ததாக சொல்வார்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இளையராஜா பாடல்கள் நம்மை ஆட்டிப்படைக்கும்” - குஷ்பு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
kushboo about ilaiyaraaja

பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்டோர் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான படம் சின்னதம்பி. பாலு தயாரித்திருந்த இப்படத்தில் மனோரோமா, ராதா ரவி, கவுணடமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இயக்குநர் வாசுவின் மகன் சக்தியும் சின்ன வயது பிரபு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றது. பாடல்களுக்கு வாலி மற்றும் கங்கை அமரன் வரிகள் எழுதியிருந்தனர். 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் கன்னடம், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்து ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத்தில் தமிழில் வெளியான அதே ஆண்டில் ராமச்சாரி என்ற தலைப்பில் வெளியான நிலையில் ரவிச்சந்திரன் மற்றும் மாலாஸ்ரீ நடித்திருந்தனர். தெலுங்கில் சண்டி என்ற தலைப்பில் 1992ஆம் ஆண்டு வெளியான நிலையில் வெங்கடேஷ் மற்றும் மீனா நடித்திருந்தனர். இந்தியில் அனாரி என்ற தலைப்பில் 1993ஆம் ஆண்டு வெளியான நிலையில் தெலுங்கில் நடித்த வெங்கடேஷ் மற்றும் கரிஸ்மா கபூர் நடித்திருந்தனர்.  

கன்னடம் மற்றும் தெலுங்கில் பி.வாசு இயக்கியிருந்தார். இந்தியில் முரளி மோகன ராவ் இயக்கியிருந்தார். இசையில் தமிழை தவிர்த்து தெலுங்கில் மட்டும் இளையராஜா இசையமைத்திருந்தார்.   இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி நடிகை குஷ்பு, படம் குறித்து நெகிழ்ச்சியுடன் அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில், “நேரம் பறக்கிறது எனச் சொல்வார்கள், அது உண்மைதான். தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட சின்னதம்பி இன்றுடன் வெளியாகி 33 ஆண்டுகள் ஆகிறது என்பதை நம்பவே முடியவில்லை. அந்தப் படம் எங்கள் வாழ்க்கையை மாற்றியது. 

எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் பி.வாசு சார் மற்றும் எனக்கு பிடித்த சக நடிகர் பிரபு சார். மறைந்த கே.பாலு தயாரிப்பாளர் எப்போதும் நினைவில் இருப்பார். ஒளிப்பதிவாளர் ரவீந்தர், என்னுடன் நடித்த துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இறுதியாக மெஜிசியன் இளையராஜா, அவரது பாடல்கள் வாழ்நாள் முழுவதும் நம்மை ஆட்டிப்படைக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Next Story

“மகிழ்ச்சி..” - அயோத்திக்கு புறப்பட்ட நடிகர் ரஜினி!

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Actor Rajini left for Ayodhya!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம், உத்தரப்பிரதேசத்திற்கு புறப்பட்டார். அதேபோல், நடிகர் தனுஷும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் புறப்பட்டுள்ளார். இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ராமர் கோயில் அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று உத்தரப் பிரதேசத்திற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்குமுன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘அழைப்பின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க செல்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று பதில் அளித்துவிட்டு சென்றார்.